வேட்பாளர்களின் தகவல்களை அறிந்துகொள்ள பப்ரல் அமைப்பால் விசேட வேலைத்திட்டம்
பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் தகவல்களை உரிய முறையில் அறிந்துகொள்வதற்காக பப்ரல் அமைப்பு விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளது.
எதிர்வரும் சில தினங்களுக்குள் சமூக வலைத்தளங்களின் ஊடாக அதனை வாக்காளர்களுக்காக வெளியிடவுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
‘உங்கள் எதிர்கால நாடாளுமன்ற உறுப்பினரை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டின் அனைத்து தேர்தல் வேட்பாளர்களின் தகவல்களையும் ஒன்றுசேர்ப்பதற்கும் அதனை சமூகத்தில் முன்வைப்பதற்குமாக இந்த வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய வேட்பாளர்கள் தாம் தொடர்பிலும் தமது விருப்பு இலக்கம் தொடர்பிலும் பாராளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கான நோக்கம் தொடர்பிலும் மக்களை
தெளிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கப்பெறும் என அவர் கூறியுள்ளார்.
வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்துவதற்கு முன்னதாக தமது வேட்பாளர்கள் தொடர்பான அடிப்படை தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நடைமுறையாக இந்த வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.