42 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் தலையிடுவதற்கான அதிகாரம் அநுரவுக்கு இல்லை
‘‘பாராளுமன்றத்தை திருடர்களின் குகை என்று கூறுவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு யாரும் வழங்கவில்லை. 42 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் தலையிடுவதற்கான அதிகாரம் அநுரவுக்கு இல்லை. பாராளுமன்றத்தில் தலையிடுவதென்றால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்’’ என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சிறப்புரிமைகளை நீக்கினாலும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வீடு, பாதுகாப்பு வசதிகள் என்பவற்றை நீக்க வேண்டாமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்புள்ளையில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ‘‘பொதுத் தேர்தலிலில் நூறுவீத வாக்குகளை தனக்கு வழங்குமாறு அநுர கோருகிறார். 42 சதவீத வாக்கு இருப்பவருக்கு பாராளுமன்றத்தில் எவ்வாறு நூறு வீத வாக்கு கிடைக்கும்? 42 சதவீதத்தை விட அநுர கோர முடியாது. அநுர எங்கு கணிதத்தைக் கற்றுக்கொண்டார்? 42 வீதத்தை விட வாக்கு குறைவடைய முடியும். ஆனால், வாக்குகள் அதிகரிக்க வாய்ப்பில்லை.
பாராளுமன்றத்தில் திருடர்களின் குகை என்று ஜனாதிபதி கூறுகிறார். அவ்வாறு கூறுவதற்கான அதிகாரத்தை யார் வழங்கியது? 58 சதவீதமான மக்கள் இந்தப் பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்கள். பாராளுமன்றத்தில் தலையிடுவதற்கு அநுரவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தேசிய மக்கள் சக்திக்கும் அதிகாரம் கிடையாது.
2023 ஆம் ஆண்டில் கெஹெலியவை பதவி நீக்கம் செய்யுமாறு யோசனை கொண்டுவந்தாராம், ஆனால், பாராளுமன்றம் அது தொடர்பில் நடவ டிக்கை எடுக்கவில்லையாம். அதன் காரணமாகவே பாராளுமன்றத்தை திருடர்களின் குகை என்று கூறுவதாகக் காரணம் கூறுகிறார்.
அநுர பாராளுமன்றத்தைத் திருடர்களின் குகையென்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சிறுபான்மைப் பலம் கொண்ட அரசாங்கமாகும். என்னால் முடியாதென்றால் அவராலும் முடியாது. பாராளுமன்றத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றுகின்றனர். எனக்கு அதில் எந்தச் சிக்கலும் இல்லை. நான் அரச வீட்டில் இல்லை. எப்படியென்றாலும் என்னால் அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தை சேமித்திருக்கிறது. என்னால் தற்போது 40 கோடி ரூபாய் செலவழித்து கஜு உண்ணவும் முடியாது. 40 கோடி ரூபா செலவழித்து வெண்ணெய்கட்டி (சீஸ்)உண்ணவும் முடியாது. எனது பாதுகாப்பு அதிகாரிகளை நீக்கியதால் இன்று 40 கோடி ரூபாவை சேமிக்க முடியும். ஆகவே, என்னால் மாத்திரம் 120 கோடி ரூபா மீதமாகியுள்ளது.
எதற்காக சந்திரிகாவை துரத்துகிறீர்கள்? அவரை அந்த வீட்டில் இருக்கவிட வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியினாலேயே அவரின் கணவரும் உயிரிழந்தார். ஜனாதிபதியாக இருந்தபோது, குண்டுத்தாக்குதலால் கண்ணையும் இழந்தார். சந்திரிகா எப்போதும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியதுமில்லை. மைத்ரிபால சிறிசேனவுக்கே ஆதரவளித்தார். எனக்கு விசேடமாக எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. இருந்தாலும், மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு அவசியமென்றால் அதனை வழங்கவேண்டும். சகலரும் அவருக்கு எதிராகப் பேசுகிறார்கள். அது வேறுபட்ட விடயம். அன்று அவர் பிரபல்யமாக இருந்திருந்தாலும் இன்று அவர் பிரபல்யமில்லை. பாதுகாப்புப் பிரச்சினை இருக்குமாக இருந்தால் அதனை வழங்க வேண்டும். அவற்றை நிராகரிக்கக் கூடாது. தொடர்ந்து 25, 30 வருடங்கள் அந்த வீட்டில் அவர் இருக்க மாட்டார். அவரை அந்த வீட்டில் வாழவிடவேண்டும். எனக்கான சகல சலுகைகளையும் நீக்கிவிட்டு மற்றையவர்களின் சிறப்புரிமைகளை அவ்வாறே வழங்குங்கள்.
அதேபோன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கைவைக்கக் கூடாது. பாராளுமன்றத்தில் கைவைப்பதென்றால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.