வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (25) மாலை வரை குறித்த எண்ணிக்கையுடைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 16 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.உயர் தர பரீட்சைக்கான மத்திய நிலையங்கள் இல்லாத பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள்,பொது மண்டபங்கள் இவ்வாறு தற்காலிக பாதுகாப்பு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது.
குறித்த நலன்புரி நிலையங்களில் 419 குடும்பங்களைச் சேர்ந்த 1426 நபர்கள் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.மழை வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..
-மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் தலைமையில்,பிரதேச செயலாளர்கள்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்,கிராம அலுவலர்கள் தமது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை திறட்டி வருவதோடு,அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
அனர்த்தங்கள் ஏற்பட்டால் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினரும் தயார் படுத்தப்பட்டுள்ளன.
தற்போது தொடர்ந்தும் மழை பெய்து வருகின்ற மையினால் மக்களின் இடப்பெயர்வு அதிகரிக்கும் என தெரிய வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு,மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர்.லெம்பேட்