காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம் : மக்கள் தப்பியோட்டம் !

காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம் : மக்கள் தப்பியோட்டம் !

ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டு வரும் இஸ்ரேலியப் படை மத்திய மற்றும்
தெற்கு காசாவில் ஆழ ஊடுருவி வரும் அதே நேரம் அங்கு நடத்தும் சரமாரி தாக்குதல்களில் நேற்றும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்வதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதி பதி ஜோ பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கும் நிலையிலேயே புதிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

பல மாதங்கள் நீடிக்கும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தமது நிபந்தனைகளில் உறுதியாக இருக்கும் நிலையில் எந்த முன்னேற்றமும் காண முடியாதுள்ளது.

வடக்கு காசாவின் பெயித் லஹியா நகரில் வீடு ஒன்றை இலக்கு வைத்து நேற்று (22) நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதோடு மத்திய காசாவின் அல்மகாசி அகதி முகாமில் இடம்பெற்ற தாக்குதலில் உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மேலும் அறுவர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவவட்டாரம் தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவில் இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் மேலும் ஐவர் பலியாகியுள்ளனர்.

மத்திய காசாவின் டெயிர் அல்பலாஹ் மற்றும் தெற்கின் கான் யூனிஸ் நகரில் படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது இராணுவ கட்டுமானங்கள், ரொக்கெட் குண்டுகள் அமைந்திருக்கும் இடங்கள் தகர்க்கப்பட்டு போராளிகள் பலரும் கொல்லப்பட்டதாகவும் அந்த இராணுவம் கூறியது.

பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் போர் நிறுத்த முயற்சியில் எந்த முன்னேற்றமும் இன்றி கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா திரும்பினார்.

இதனையடுத்தே ஜோ பைடன் மற்றும் நெதன்யாகு இடையெ நேற்று முன்தினம்
தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டு வந்து காசாவில் உள்ள இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகளை விடுவித்து இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பல பலஸ்தீன
கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றை விரும்புவதாக ஹமாஸ் அமைப்பு குறிப்பிடுகிறது.

எனினும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் நிறுத்தம் ஒன்றை எட்டத் தவறி இருப்பதாக அது குற்றம்சாட்டியுள்ளது.

ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டாலேயே போர் முடிவுக்கு வரும் என்று கூறும் நெதன்யாகு பணயக்கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒரு
தற்காலிக போர் நிறுத்தமாகவே அமையும் என்று கூறி வருகிறார்.

இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என சுமார் 1 மில்லியன் மக்கள் தங்கி இருப்பதாக குறிப்பிடப்படும் மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வின் கிழக்கில் இருந்து டாங்கிகள் முன்னேறி வருவதாகவும் அருகாமையில் உள்ள தெற்கு
நகரான கான் யூனிஸுடனான நகரின் சில வீதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய டாங்கிகள் கான்யூனிஸின் அல் கராரா மற்றும் ஹமாத் பகுதிகளில் மேற்கை நோக்கி முன்னேறி வரும் நிலையில் மேலும் பல குடும்பங்கள் தமது தற்காலிக முகாம்கள் மற்றும் கூடாரங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

சில நேரங்களில் டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்துவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்குவதற்கு இடம் அல்லது முகாம்களை கண்டுபிடிக்க தவறிய சிலர் வீதிகளிலும் கடற்கரைகளிலும் உறங்கி வருகின்றனர்.

‘கடந்த இரவு ஆளில்லா விமானங்கள் கூடாரங்களை சுட ஆரம்பித்தன, நாம் கீழே படுத்துக்கொண்டோம். சில மணி நேரம் சென்றிருக்கும், டாங்கிகள் நெருங்கி வருவதுபோல் சத்தம் உரக்கக் கேட்டது. எனவே அங்கிருந்து தப்பிச் செல்ல முடிவெடுத்தோம்’ என்று கான் யூனிஸில் இருந்து 48 வயதான அல் கலயீனி தொலைபேசி மூலம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

‘நாம் 48 பேர் கொண்ட ஐந்து குடும்பங்கள் இருக்கிறோம். கடற்கரையை நோக்கி நாம் ஓட்டம் பிடித்தோம். சிலர் வீதிகளிலும் மற்றும் சிலர் கடற்கரை மணலில் கூடாரங்கள், போர்வைகள் மற்றும் மெத்தைகள் எதுவும் இன்றி உறங்கிறோம்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எவ்வளவு பயந்திருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் பலஸ்தீனர்கள் இடையே போர் நிறுத்தம் பற்றி ஏமாற்றம் அதிகரித்து வருவதாக கலயீனி குறிப்பிட்டார்.

‘இந்தப் பேச்சுவார்த்தை கால விரயமானது. நெதன்யா கு தான் செய்வதை தொடர்வதற்கு அவகாசம் வழங்குவதே அவர்களின் நோக்கம்.

டாங்கிகள் நுழையாத அல்லது குண்டுகள் வெடிக்காத எந்த இடமும் இங்கு இல்லை.
எங்கும் இனியும் பாதுகாப்பு இல்லை’ என்றார்.

2.3 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் 10 மாதங்களுக்கு முன் போர் ஆரம்பித்தது தொடக்கம் பல தடவைகள் இடம்
பெயர்ந்துள்ளனர்.

பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் கூட இஸ்ரேலின் வான்
தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

நேற்றுடன் 321 நாட்களை தொட்ட காசாவில் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில்
40,200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குக் கரையில் மூவர் பலி இதேவேளை, காசா போரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையிலும் பதற்றம் நீடிக்கும் நிலையில் துல்கராமில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று (22) நடத்திய வான் தாக்குதலில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

துல்கராமில் உள்ள தமது படைப்பிரிவு இஸ்ரேலிய படையுடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான இசதீன் அல்கஸ்ஸாம் படை அறிவித்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இங்கு கூரைகளில் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளை நிறுத்தி இருக்கும் இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள கட்டடங்களை தகர்க்க புல்டோசர்களையும் அனுப்பியுள்ளது.

மேற்குக் கரையின் பல நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் இஸ்ரேல் சுற்றிவளைப்புகளை நடத்தியதாகவும் பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

காசா போரினால் இஸ்ரேலின் லெபனான் எல்லையிலும் பதற்றம் நீடிக்கிறது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானுக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியதை அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு ஆக்கிரமிக்கப்பட்ட கோலன்குன்று பகுதியில் ரொக்கெட் குண்டுகளை வீசியது.

கடந்த புதன் இரவு தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் பக்கா பள்ளத்தாக்கில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஆயுதக் களஞ்சிய வசதிகள் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இந்தத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 30 பேர் காயமடைந்ததாக
லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதற்கு பதிலடியாக கோலன் குன்றில் இஸ்ரேலிய இராணுவ
நிலைகளை இலக்கு வைத்து ரொக்கெட் தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.

இதில் இரு வீடுகள் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக இஸ்ரேல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )