தொற்று நோயை தடுக்க துரித நடவடிக்கை !
தொற்று நோய் பரவல் நிலைமை தொடர்பில் துரித நடவடிக்கைகளை எடுப்பதற்காக விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்ட அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக இந்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காலை 07 மணி முதல் மாலை 06 மணி வரை இந்த பிரிவு செயற்படவுள்ளது.
இந்த பிரிவின் ஊடாக அம்மை, ருபெல்லா உள்ளிட்ட தொற்றுநோய்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
011 – 744 65 13, 011-768 27 22, 011- 768 28 72 அல்லது 011- 768 26 62 எனும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவும் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதனிடையே, அம்மை நோய்த் தொற்றிய ஒருவரிடமிருந்து 18 பேருக்கு அம்மைத் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அம்மைத் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொள்ளாத நபர்கள் இருந்தால் உடனடியாக தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கை 2019 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.
எனினும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக சர்வதேச ரீதியில் பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டன.
இதன் காரணமாக அம்மை நோய் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் விளைவாக 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இலங்கையில் மீண்டும் அம்மை நோயாளர்கள் பதிவாகிவருகின்றனர்.
எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரைவிசேட அம்மை, ருபெல்லா நோய் எதிர்ப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.