நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 23 இந்திய மீனவர்களும் விடுவிப்பு
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் நேற்று (04) விடுதலை செய்யப்பட்டனர்.
23 பேரும் நேற்று (03) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கை ஆராய்ந்த நீதிவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
23 மீனவர்களில் 3 பேர் படகோட்டிகள் என்றதன் அடிப்படையில் தலா 40 இலட்சம் ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்தும் அதேவேளை 6 மாதச் சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி நீதிவான் உத்தரவிட்டார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிவான் தீர்ப்பளித்தார்.