சட்டவிரோதமான இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவர் கைது
சட்டவிரோதமான முறையில் இன்று (20) இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ரூ. 5 கோடி பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முதல் இரு சந்தேகநபர்களும் இன்று (20) அதிகாலை 12.30 மணியளவில் துபாயிலிருந்து FZ-569 விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த நபர்கள் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38 மற்றும் 25 வயதுடைய வர்த்தகர்களாவர்.
மேலும், கொழும்பில் வசிக்கும் வர்த்தகரான 32 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் துபாயிலிருந்து இன்று காலை 09.45 மணியளவில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
குறித்த நபர்களிடமிருந்து 309 கையடக்கத் தொலைபேசிகள், 08 Tabs கணனிகள், கையடக்கத் தொலைபேசி உபகரணங்கள், 12 மடிக்கணினிகள், 02 MacBook , 04 iPad , 20 Smart watches, 05 Ruter , 30 Earbuds என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மூவரையும் தடுத்து வைத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.