ஆரோக்கியமான உடல் நலனுக்கு உடற்பயிற்சி மட்டும் போதுமா ? இந்த 6 விஷயத்தையும் பின்பற்றுங்கள் !
அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
அதிகமான மக்கள் உடற்பயிற்சியின்போது என்ன விஷயங்களை செய்ய வேண்டும், என்ன விஷயங்களை செய்யக்கூடாது என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றனர்.
அந்தவகையில் உடற்பயிற்சிக்கு பிறகு நாம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
நீரேற்றமாக இருக்க வேண்டும்
உலக உயிர்களுக்கு நீர் முக்கிய தேவையாக உள்ளது.
பெரும்பாலான மக்கள் அதிகமான நீரிழப்பிற்கு ஆளாகின்றனர்.
போதுமான அளவில் திரவத்தை எடுத்துக் கொள்ளாததே இதற்கு காரணமாகும்.
நம்மில் பலர் தினமும் தேவையான அளவில் தண்ணீர் குடிப்பதில்லை.
சுமாராக தினமும் ஒரு கிலோ எடைக்கு 30 முதல் 35 மி.லி. தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிக வியர்வை வரும் வேலை செய்பவர்கள் இன்னும் அதிகமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்யும்போது நமக்கு அதிகமான அளவில் வியர்வை வெளியேறுகிறது.
இதனால் உடற்பயிற்சிக்கு பின்பு உடலுக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது.
எனவே, உடற்பயிற்சி முடிந்த பிறகு தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம்.
அதேபோல நீரேற்றமாக இருக்க வெறும் தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்றில்லை.
எலுமிச்சை நீர், மோர், நீராகாரம் போன்றவற்றையும் சேர்த்தே எடுத்துக் கொள்ளலாம். அப்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
உடற்பயிற்சிக்கு பிறகு ஓய்வெடுத்தல்
சிலர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கின்றனர்.
அவர்கள் உடற்பயிற்சிக்கு இடையே அல்லது உடற்பயிற்சி முடிந்து ஓய்வெடுப்பதில்லை.
சிலருக்கு உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே தலைசுற்றல் அல்லது லேசான மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
ஏனெனில் உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடலில் வெப்பநிலை அதிகரிக்கிறது, இதனால் ரத்த நாளங்கள் அகலமாக திறக்கின்றன.
இந்த ரத்த நாளங்கள் இயல்பு நிலையை அடைவதற்கு உடலுக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.
எனவே ஒவ்வொரு பயிற்சிக்கு இடையிலும் சில நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.
உணவில் கவனம்
உடற்பயிற்சி மூலமாக நீங்கள் பல்வேறு நலன்களை பெறுவீர்கள். ஆனால், உடற்பயிற்சி செய்வதற்கான முக்கிய காரணமே நம் உடலில் உள்ள கலோரிகளை எரித்து ஆற்றலாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.
ஆனால் உடற்பயிற்சிக்கு பின்பு கலோரி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் எனில் அது உங்கள் உடற்பயிற்சியை உபயோகமற்றதாக மாற்றிவிடும்.
எனவே உடற்பயிற்சிக்கு பிறகு அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால் தயிர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
எனவே உடற்பயிற்சிக்கு பிறகு நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவில் கவனமாக இருங்கள்.
அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுதல்
உடற்பயிற்சியில் மீட்பு பணி என்பது முக்கியமான விஷயமாகும். அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் உங்கள் உடலில் செரிமானத்தை குறைத்து உடல் மீட்கும் திறனை தடுக்கிறது.
எனவே அதிக கொழுப்புகள் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் கொண்ட கலவைகளை உடற்பயிற்சிக்கு பின்பாக உண்ண வேண்டாம்.
உடற்பயிற்சிக்கான நேரம்
நாம் செய்கிற உடற்பயிற்சிகள் குறித்த அட்டவணையை நாம் வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைவாக 15 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்கிறோம் என்றாலும் கூட அதை கணக்கிட வேண்டும்.
அதை வைத்து நாளாக நாளாக நமது உடற்பயிற்சியின் முன்னேற்றத்தை நம்மால் காண முடியும். இது உங்களை ஊக்கப்படுத்தும் விஷயமாக இருக்கும்.
ஒருவேளை உங்கள் உடற்பயிற்சியில் உங்களுக்கு அலுப்பு ஏற்பட்டால் இந்த நாட்குறிப்பை பார்க்கும்போது அலுப்பு நீங்கும்.
இதற்கென்று பிரத்யேக செயலிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தவும்.
உடற்பயிற்சி ஆடைகள்
நாம் உடற்பயிற்சி செய்த பிறகு வியர்வை காரணமாக நமது ஆடைகள் மிகவும் ஈரமாகிவிடுகிறது.
எப்போதும் உடற்பயிற்சிக்கு பிறகு அந்த ஆடைகளை மாற்றி விட வேண்டும். ஆனால் சிலர் தங்களது ஆடைகளை மாற்றுவதில்லை.
ஈரமான ஆடைகளை அணிவது உங்களுக்கு குளிர்ச்சியாக இருக்கலாம்.
ஆனால் உடற்பயிற்சிக்கு பின்பாக உங்கள் சருமத்தை உலர வைக்க வேண்டும்.
எனவே ஆடைகளை மாற்ற வேண்டும்.
இந்த வழிமுறைகளை எல்லாம் சரியாக பின்பற்றுவதன் மூலம் சரியான முறையில் நாம் உடற்பயிற்சியை செய்து ஆரோக்கியமான உடல் நலனை பெற முடியும்.