ஹட்டன் பஸ் விபத்து ; பஸ் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த தனியார் பஸ் நேற்று (23) நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது, விபத்துக்குள்ளான பஸ்ஸில், சாரதியின் கதவு பழுதடைந்திருந்தமையும், திடீரென கதவு திறந்த போது இருக்கையிலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் பொறுப்பில் இருந்த பஸ்ஸை பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் சோதனையிட்டார்.
இந்தச் சோதனையின் போது பஸ்ஸில், சாரதியின் கதவு நீண்ட காலமாக பழுதடைந்திருந்தமையும், குறித்த கதவினை தற்காலிக மூடுவதற்கு முறையொன்றை அவர்கள் கடைப்பிடித்திருந்தமையும் மோட்டார் வாகன பரிசோதகரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சாரதியின் இருக்கைக்கான பாதுகாப்பு பெல்ட் இருக்கவில்லை எனவும், பஸ்ஸினுள் பல்வேறு அலுமினிய சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததால், விபத்து காரணமாக பயணிகள் படுகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பஸ்ஸின் இருக்கைகள் தரமான முறையில் பொருத்தப்படாததால், அனைத்து இருக்கைகளும் கழன்று விழுந்து ஒன்றுடன் ஒன்று மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டதாக மோட்டார் பரிசோதகர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் எந்தவிதமான உபகரணங்களையும் பொருத்த அனுமதிக்க வேண்டாம் என்றும், பொருத்தப்பட்ட உபகரணங்களை அகற்றுமாறும் தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
தகுதியற்ற பஸ்ஸை இயக்கியமை தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.