இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் !
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,
‘அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படும் ‘என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என இந்திய செய்திகள் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல், கர்நாடகாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (27) ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கர்நாடக முதலமைச்சர் அலுவலக செய்தி தெரிவிக்கின்றது.
இதேவேளை மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை (28) நடைபெறவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கட்சி சார்பில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.