2022 ஆம் ஆண்டு உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் அகழ்ந்தெடுப்பு !
2022 ஆம் ஆண்டு உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம், நவாலியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் 2022 ஆம் ஆண்டு உயிரிழந்த 42 வயதான ஜேசுதாசன் ரஞ்சித் குமாரின் சடலம் நேற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
இவர் மன்னார் – இலுப்பை கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் பகுதியில் வசித்து வந்த இவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பான வழக்கும் மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக குறித்த நபர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் நவாலி, கல்லூண்டாய் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், குறித்த நபர் மீதான விபத்து தொடர்பான வழங்கு, மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நபர் அங்கு பிரசன்னமாகாத நிலையில், அவர் உயிரிழந்த விடயமும் அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, சடலம் புதைக்கப்பட்ட இடமானது மல்லாகம் நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உள்ளமையால் இது விடயம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் அறிவித்தல் வழங்கப்பட்டது.
அந்தவகையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அவரது சடலத்தை தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளமைக்கு இணங்க, நேற்று மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஜெகநாதன் சுபராகினி முன்னிலையில் சடலம் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
இதன்போது, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன், தடயவியல் பொலிஸார், வலி தென்மேற்கு பிரதேச சபையினர், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மானிப்பாய் பொலிஸார், கிராம அலுவலர்கள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் வருகைத் தந்திருந்தனர்.
இவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்ட சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.