தபால்துறை சம்பள அதிகரிப்பு
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகா ரம் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு சாதகமான தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்காவிட்டால், இந்த அரசாங்கத்துடன் ஒத்து ழைப்புடன் செயற்படும் பய ணத்தை முறித்துக்கொள்ளும் நிலைமை ஏற்படலாம் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தினர் அவர்க ளுக்கு ஏற்றாற்போன்று செயற்படுகிறார்கள் என்றால் அல்லது முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்களின் கடந்த காலத்தை மறந்து புதிய பாதையில் செல்கிறார்கள் என்றால் கோட்டாபய ராஜபக்ஷவின் யுகம் மீண்டும் இந்த நாட்டில் தோற்றம்பெறுவதற்கு அதிக காலம் தேவைப்படாது என்றும் அந்த முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 19ஆம் திகதியின் பின்னர் முன்னறிவித்தல் எதுவுமின்றி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தயங்கமாட்டோம் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சரத் சந்திரபிரிய சுட்டிக்காட்டினார்.
தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்து நேற்று முன்தினம் (15) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் , ”கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளின்போது தற்போதைய தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஒருநாள் சுகயீனபோராட்டத்தை முன்னெடுக்க அவரின் தொழிற்சங்கத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார்.
மின்சார சபையிலுள்ள ரஞ்சன் ஜயலாலின் தொழிற்சங்கமும் எங்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தது. அந்தப் போராட்டங்களின்போது 20,000 ரூபாவால் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்குமாறே கோரிக்கை முன்வைத்திருந்தோம். ஆனால், அமைச்சர்களானதும் தற்போது தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டே செயற்படுகிறார்கள்.
கோட்டா முறையில் தொழிற்சங்க பிரச்சினைக்கு தீர்வு வழங்க முயற்சிக்கிறார்கள். மஹிந்த ஜயசிங்க கல்வித் துறையிலுள்ள தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண முயற்சிக்கிறார். ஏனையவர்கள் அவர்களுக்கு தொடர்புடைய தொழிற்சங்கப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முயற்சித்து வருகிறார்கள்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கு முன்னர் ரணிலினால் முன்னெடுக்கப்பட்ட சகல வேலைத்திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தார்கள்.
ஆனால் தற்போது ரணில் சென்ற பாதையிலேயே இந்த அரசாங்கமும் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆணைக்குழுக்களுக்கும் குழுக்களுக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த இவர்களே தற்போது குழுக்களை அமைத்து பிரச்சினைகளை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச பணியாளர்களுக்கு 20,000 ரூபா அடிப்படைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இதற்கு முன்னர் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் தொழிற்சங்கங்களிடம் யோசனைகளையும் நிலைப்பாடுகளையும் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், இந்த அரசாங்கம் எங்களின் தொழிற்சங்கங்களிடம் எந்தவொரு யோசனையையும் கோரவில்லை.
அதேபோன்று, அரச சேவைக்கான புதிய நியமனங்கள் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 7,788 ஆக இருக்க வேண்டிய தபால் ஊழியர்களின் எண்ணிக்கையில், கடந்த மே மாதத்துடன் 1,662 பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு புதிய நியமனங்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த அரச உத்தியோகத்தர்களை புறந்தள்ளிவிட்டே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. எனவே, அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரித்தல், புதிய நியமனங்களை வழங்குதல், தபால் சேவையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாவிட்டால் எதிர்வரும் 19ஆம் திகதியின் பின்னர் தபால் சேவைப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க நேரிடும்.” என தெரிவித்துள்ளார்.