சட்டவிரோதமாக 9 எருமை மாடுகளை லொறியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது
எம்பிலிப்பிட்டியவிலிருந்து சிறிய லொறியில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட 9 எருமை மாடுகளுடன், லொறியின் சாரதி உட்பட இருவரை கொட்டவில பொலிஸார் இன்று அதிகாலை கம்புருகமுவ சந்தியில் வைத்து கைது செய்தனர்.
மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் பறிமுதல் செய்தபோது, மாடுகளில் ஒன்று ஏற்கனவே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக கால்நடை திருட்டு நடந்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கிளை வீதி ஒன்றின் வழியாக பயணித்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக, கொழும்பு நோக்கி ரகசியமாக செல்ல லொறி ஒன்று தயாராகி வருவதாக பொலிஸாராருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் கேபினில் ஒரு சிறிய அளவு ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பட்டா ரக லொறியின் முன்பக்க இலக்கத்தகடும், வாகன வருமான உத்தரவு பத்திரமும் பொருந்தாத நிலையில், போலி இலக்கத்தகடுகளைப் பயன்படுத்தி இந்த மோசடி நடத்தப்படுகிறதா? என்பதைக் கண்டறிய பொலிஸார் விசேட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சந்தேகநபர்கள், அளுத்கம தர்காநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
எம்பிலிப்பிட்டி பகுதியிலிருந்து இந்த மாடுகள் திருடப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.