யானைகள் வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
முறையான பதிவுகள் இன்றி யானைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகிய தரப்பினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் மீட்கப்பட்ட 15 யானைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அவற்றின் உரிமையாளர்களுக்கு மீண்டும் கையளிப்பது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரி சுற்றுச்சூழல் அமைப்புகளால் நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்படி மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் முறையான பதிவுகள் இன்றி யானைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை முறையான அனுமதிப் பத்திரம் இல்லாத காரணத்தினால் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்ட யானைகளை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவித்து கொழும்பு மற்றும் மாத்தளை நீதவான் நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவையும் செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.