பிரித்தானிய வரலாற்றில் முதல் பெண் நிதியமைச்சர் நியமனம் !
பிரித்தானியாவில் 11 பெண்கள் அடங்களாக 25 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழில் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியப் பாரம்பரிய முறைக்கு அமைய மன்னர் சாள்ஸ்ஸை சந்தித்து தமது வெற்றியினை அறிவித்தார்.
பெக்கிங்ஹாம் மாளிகையில் மன்னரைச் சந்தித்து விட்டு கெய்ர் ஸ்டார்மர் நேரடியாகப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான இலக்கம் 10 டௌனிங் வீதிக்குச் சென்று தமது கன்னி உரையை நிகழ்த்தினார்.
இந்த நிலையில் பிரித்தானியாவின் துணை பிரதமராக எஞ்சலா ரெய்னர் மற்றும் நீதி செயலாளராக ஷபானா மாஹ்முட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பிரித்தானியாவின் முதலாவது பெண் சான்ஸ்லராக ரேச்சல் ரீவ்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் வெளிவிவகார செயலாளராக டேவிட் லம்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் தொழிலாளர் கட்சி சார்பில் இந்த முறை தேர்தலில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட உமா குமரன் 19,000க்கும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.