விவசாயிகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த அரசு நெல்லுக்கு நிலையான விலையை வழங்க தவறிவிட்டது
எதிர்கட்சியில் இருந்து கொண்டு விவசாயிகளுக்காக குரல் எழுப்பி, நெல்லுக்கான நிர்ணய விலையை தீர்மானிப்போம், அதனை சட்டமாக்குவோம் என்று பிரஸ்தாபித்தனர். ஆனால் இன்று அமைச்சர் பதவிகளை வகித்துக் கொண்டு உர மானியமாக 25000 ரூபாயை கூட உரிய நேரத்தில் வழங்க முடியாதுபோயுள்ளனர். ஒரு சாராருக்கு 15,000 ரூபா என்றும் மற்றுமொரு சாராருக்கு 10,000 ரூபா என்றும் வழங்கப்பட்டுள்ளதே தவிர 25000 ரூபா இன்னும் மொத்தமாக போய் சேரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதியில் கும்புக்கடே பிரதேசத்தில் அமைந்துள்ள கசாகல புராண ரஜமஹா விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் நேற்றைய (01) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாடு வங்குரோத்து நிலையை எட்டியதோடு நாட்டின் பெரும்பாலான மக்களின் ஜீவனோபாயம் வீழ்ச்சி கண்டன. பலர் வறுமை நிலையை அடைந்தனர். இன்றும் நம் நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான தெளிவான திட்டமொன்று இல்லை. தற்போதைய அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த பிறகு முறையான திட்டத்தை செயல்படுத்தாது, தற்காலிக நிவாரணங்களை வழங்கி வருகிறது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ஏழ்மையை போக்குவதற்கான இலக்குடனான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.