
பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை சரிசெய்ய முடியாது – எதிர்க்கட்சி தலைவர்
மின்சக்தித் துறையை உள்ளடக்கிய அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் தீவிர மறுசீரமைப்புகளின் ஊடாகவே அது சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். மாறாக பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக தடை பற்றிய நிலைமைகளை சரிசெய்ய முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சாரசபையின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எம்.பி.எஸ்.சமரசேகர கடந்த ஆண்டு நவம்பரில் அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலில் குரங்கின் மேல் குற்றச்சாட்டினை முன்வைத்த தற்போதைய அரசாங்கம், பின்னர் அந்த குற்றச்சாட்டுக்களை முந்தைய அரசாங்கங்கள் மீது மாற்றியது.
ஆனால் உண்மையான பிரச்சினை என்ன? சூரிய மின்சக்தியின் மேம்பாடும், குறைந்த மின்விநியோக காலங்களை முகாமை செய்ய முடியாத பலவீனமான மின் வலையமைப்பின் இருப்பும்தான் காரணமாகும்.
பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக தடை பற்றிய நிலைமைகளை சரிசெய்ய முடியாது. அவற்றை சரி செய்வதற்கான ஒரே வழி, மின்சக்தித் துறையை உள்ளடக்கிய அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் தீவிர மறுசீரமைப்புகள்தான்.
உண்மையான மாற்றம் ஆரம்பமாகும் போது அது வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.