![வெவ்வேறு நாடுகள் காதலர் தினத்தை தனித்துவமாக எப்படி கொண்டாடுகின்றன ? வெவ்வேறு நாடுகள் காதலர் தினத்தை தனித்துவமாக எப்படி கொண்டாடுகின்றன ?](https://peoplenews.lk/wp-content/uploads/2025/02/37-5.jpg)
வெவ்வேறு நாடுகள் காதலர் தினத்தை தனித்துவமாக எப்படி கொண்டாடுகின்றன ?
உலகம் முழுவதிலும் காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக காதலர் தினம் மருவி நிற்கிறது. அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் எவ்வாறு காதலர் தினம் வித்தியாசப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
பின்லாந்து:
இங்கு வழக்கமான காதலர் தின மரபுகளுக்குப் பதிலாக, ” நட்பு தினம் ” பிப்ரவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. நண்பர்களை வாழ்த்தியும் பரிசளித்தும் இந்த தினத்தைப் பின்லாந்து மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஜப்பான்:
ஜப்பானில், காதலர் தினத்தன்று பெண்கள் தங்கள் துணைக்கு சாக்லேட்டுகள், பரிசுகள் வழங்கி மகிழ்வார்கள். இந்த பாரம்பரியம் அதோடு முடிவடையவில்லை. சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, மார்ச் 14 அன்று, ஜப்பான் வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறது. அப்போது பரிசுகளைப் பெற்ற ஆண்கள் தங்கள் காதலிக்குப் பரிசுகளை வழங்குவார்கள்.
டென்மார்க் மற்றும் நார்வே:
டென்மார்க் மற்றும் நார்வேயில், காதலர் தினம் என்பது ஜோடிகளுக்கு மட்டுமல்ல, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் தங்களுக்குள் கவிதை அட்டைகளைப் பரிமாறிக்கொள்வார்கள். கவிதை அட்டைகளை நேசிப்பவர்களுக்கு தங்களின் பெயரை எழுதாமல் அனுப்புவார்கள். யார் அனுப்பியது என்று அவர் கண்டுபிடித்தால் அவர் ஈஸ்டர் முட்டையை வெல்வார். இல்லையெனில் ஈஸ்டர் முட்டையை அவர் அனுப்பியவருக்குத் தர வேண்டும்.
இங்கிலாந்து:
இங்கிலாந்தில், காதலர் தினம் பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகள் மிட்டாய், பழம் அல்லது பணத்திற்கு ஈடாக பாட்டு பாடும் ஒரு அழகான பாரம்பரியம் உள்ளது. சிலர் திராட்சை, பிளம்ஸ் அல்லது காரவே விதைகளால் சுடப்பட்ட காதலர் பன்கள் அல்லது “பிளம் ஷட்டில்ஸ்” பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஜெர்மனி:
காதல் மற்றும் காமம் இரண்டையும் குறிக்கும் வகையில், பன்றி சிலைகளையும், பொம்மைகளையும் கொடுத்து ஜெர்மானியர்கள் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்
பிலிப்பைன்ஸ்:
காதலர் தினத்தில் அதிக திருமணங்கள் நடக்கும் இடம் பிலிப்பைன்ஸ். நூற்றுக்கணக்கான தம்பதிகள் வாழ்வில் ஒன்றிணைகிறார்கள். இதற்காக அரசாங்கம் பெரிய அளவிலான விழாக்களை நடத்துகிறது.
தென்னாப்பிரிக்கா:
ரோமானிய பண்டிகையான லூபர்காலியாவை கௌரவிக்கும் விதமாக பிப்ரவரி 15 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் அதுவரை தாங்கள் ரகசியமாக வைத்திருந்த காதலை வெளிப்படுத்துவார்கள்.
தான் காதலிக்கும் ஆடவனின் பெயரைத் துணிச்சலுடன் தங்கள் சட்டைகளில் இடம்பெறச் செய்து காதலனுக்கும், உறவினருக்கும் ஊராருக்கும் தனது காதலை அறியச் செய்வார்கள். பூக்கள் அல்லது சிறிய பரிசுகள் மூலமும் காதலர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவர்.
தைவான்:
தைவானில், காதலை வெளிப்படுத்துவதில் பூக்கள் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன. ஆண்கள் காதலர் தினத்திலும், மீண்டும் ஜூலை 7 ஆம் தேதியும் காதலிக்கு பெரிய பூங்கொத்துகளை வழங்குகிறார்கள். சரியாக 108 ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை நீங்கள் பெற்றால், அது யாரோ ஒருவர் காதலை உங்களுக்கு சொல்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
தென் கொரியா:
தென் கொரியாவில், காதலர் தினம் என்பது ஒரு மாத கால கொண்டாட்டத்தின் தொடக்கமாகும். பிப்ரவரி 14 அன்று, தம்பதிகள் சாக்லேட்டுகள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள். பின்னர், மார்ச் 14 அன்று, ஜப்பானின் பாரம்பரியத்தைப் போலவே, வெள்ளை தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இறுதியாக, ஏப்ரல் 14 அன்று சிங்கிள்ஸ்களுக்கான கருப்பு தினத்துடன் கொண்டாட்டங்கள் முடிவடைகிறது.
பிரேசில்:
பிரேசிலில், திருமணத்தின் ரட்சகனான துறவி புனித அந்தோணியார் விழாவிற்கு முந்தைய நாளான ஜூன் 12 அன்று காதலர் தினம், தியா டோஸ் நமோராடோஸ் (காதலர்கள் தினம்) என்று கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி மாத காதலர் தினம் கார்னிவலுடன் வருவதால் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. அமெரிக்காவைப் போலவே, பிரேசிலியர்களும் காதலர் தினத்தன்று இரவு உணவிற்கு வெளியே செல்வது, பரிசுகளை பரிமாறிக்கொள்வது, தங்கள் துணையுடன் இரவில் டேட்டிங் செய்வது உள்ளிட்டவை மூலம் காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள்.