
காணி விடுவிப்பு தொடர்பில் வாய்திறக்காத பிரதமர் : கேள்வி கேட்ட பொது மகனால் யாழ் மக்கள் சந்திப்பில் குழப்பம்
யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரிணி அமர சூரிய பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கப்படாத வலிகாமம் வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேள்வி கேட்டதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
பிரதமர் ஹரினி அமரசூரிய பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு ஏழாலை ஏழு கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான மக்கள் கூடிய குறித்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான கபிலன் உள்ளிட்ட சிலர் உரையாற்றினர்.
இறுதியாக பிரதமர் ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் உரையாற்றினார்.
உரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணமலாக்கப்பட்டோர் விவாகரம் உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.
இந்நிலையில் பிரதமர் உரையாற்றி விட்டு மேடையில் இருந்து இறங்கி மக்களை சந்திக்க அருகில் வந்தார்.
இதன்போது பிரதமரை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக பேச காத்திருந்த காணி உரிமையாளரொருவர் பலாலி பகுதியில் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பது தொடர்பாக தனது ஆதங்கத்தை பிரதமரிடம் நேரடியாக தெரிவித்தார்.
இதன்போது பிரதமர் ஏனையவர்களுடன் பேச சென்றபோது குறித்த காணி உரிமையாளர் உங்கள் அரசியலுக்காக எங்களை பயன்படுத்த வேண்டாம் என தமிழ் மற்றும் சிங்கள மொழியில் தெரிவித்தார்.
இதன்போது பிரதமரை சூழ்ந்திருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த காணி உரிமையாளரை அங்கிருந்து அகற்றியதுடன் அதனை காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுடனும் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பிரதமர் ஹரினி அமரசூரிய பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.