
எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது
பாராளுமன்றக் குழுக்களில் உறுப்பினர்களை ஒதுக்குவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று (18) தெரிவித்துள்ளார்.
அலுவல் குழு, கோப், கோபா, பின்வரிசைக் குழு மற்றும் ஆலோசனைக் குழுக்கள் போன்ற பாராளுமன்றக் குழுக்களில் அதிக இடங்களை ஒதுக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், சில குழுக்களில் ஏற்கனவே அதிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குழுக்களில் உறுப்பினர்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரச்சினை, அலுவல் குழு கூட்டத்தின் போது அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஒரு நியாயமான கலந்துரையாடலில் தீர்க்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
கூட்டத்திற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
பாராளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சிகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கப்படுவது குறித்து, கடந்த வாரங்களாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசியல் கட்சிகள் கவலைகளை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.