
அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்
நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புதின், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
இதற்கிடையே சவுதி அரேபியாவில் நேற்று அமெரிக்கா, ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சு வார்த்தைக்கு உக்ரேன் அழைக்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.
இதில் உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்கா-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து கூறியதாவது:-
சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரேன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த துருக்கி உட்பட ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும். எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.
உக்ரேனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரேன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. சவுதி அரேபியாவுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அந்த பயணத்தை மார்ச் 10-ந்திகதி வரை ஒத்திவைத்துள்ளேன்.”இவ்வாறு அவர் கூறினார்.