
கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 55 கோடியை தாண்டியது
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் திகதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 55 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். கும்பமேளா நிறைவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.