
யாழ்.நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்
” யாழ். நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக விசாரணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
மேலும் அவர் ,” யாழ். நூலக மேம்பாட்டுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி தெரிவிக்கின்றேன்.
ஆசியாவிலேயே முதன்மை இடத்தைப்பெற்ற யாழ். நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் இன்னும் ஆறாத வடுவாக உள்ளது. எனவே, நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.
இதனை செய்தவர்கள் இப்போதும் நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள், எனவே, தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் கல்வியில் மேலோங்கி இருந்த ஒரு மாவட்டம். யாழ்ப்பாணம் என்றால் கல்வி மான்கள் சிறந்து விளங்கிய மாவட்டம். இன்று பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு நூலகம் எரிப்பு சம்பவமும் ஒரு காரணம்.
நிதி ஒதுக்கீட்டுக்கு நன்றி. அதேபோல எரித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்