
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களினால் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்திருந்தது.
அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (23) முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெத்சந்த செவன பகுதியில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒரு திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, இந்த நாட்டில் குற்றச் செயல்களை நடத்தி வருபவர் என்பது தெரியவந்தது.
சந்தேக நபர், கொட்டாஞ்சேனைக்கு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கொழும்பு கோட்டைப் பகுதியிலிருந்து தனது முச்சக்கர வண்டியில் பலாமரச் சந்தியில் (கொஸ்கஸ் சந்தி) உள்ள அவரது மனைவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, குற்றத்திற்கான துப்பாக்கி மற்றும் ரவைகளை அவருக்கு வழங்கியுள்ளார்.
மேலும், சந்தேகநபர் கடந்த 2025.02.10 அன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.