
வீட்டில் நறுமணம் வீச என்ன செய்யலாம் ?
வீட்டிற்குள் நுழைந்தவுடன் புத்துணர்ச்சி மணம் கமழ, என்னென்ன வழிவகைகள் இருக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
* மெழுகுவர்த்திகள்

வீட்டின் நறுமணத்துக்காக இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்படுபவை வாசனை மெழுகுவர்த்திகள்தாம். வாசனைப் பொருட்களில் மெழுகுவர்த்திகள் பிரபலமாக இருக்கின்றன. அவை வாசனையை அழகாக அறையில் பரவவைப்பதோடு, அறைக்கு புத்துணர்ச்சி தரும் வெளிச்சத்தையும் வழங்குவதுதான் அதற்குக் காரணம். வீட்டில் அதிகமான நேரத்தை எந்த அறையில் செலவிடுகிறோமோ, அந்த அறையில் வாசனை மெழுவர்த்திகளைப் பயன்படுத்துவது சிறந்தது.
வரவேற்பறை, சமையலறை ஆகிய இரண்டு அறைகளும் வாசனை மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்துவதற்குச் சிறந்தவை. நீண்ட நேரம் அறையில் வாசம் தங்க வேண்டுமென விரும்பினால், வாசனை மெழுகுவர்த்தியைக் குறைந்தது மூன்று மணி நேரமாவது எரியவிட வேண்டும். மெழுகுவர்த்தி உருக உருக அறையில் வாசனை பரவத் தொடங்கும். இந்த வாசனை மெழுகுவர்த்திகள் அறையை அலங்கரிக்கவும் சிறந்தவை.
* ஸ்ப்ரே

காற்றோட்டமான அறைகளுக்கு வாசனை ‘ஸ்ப்ரே’வைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். உணவு, செல்லப்பிராணிகளின் வாசத்தைப் போக்குவதற்குச் சிறந்தது வாசனை ‘ஸ்ப்ரே’. உடனடியாக, அறையின் வாசத்தை மாற்றுவதற்குச் சரியானது வாசனை ‘ஸ்ப்ரே’தான். வாசனைப் பொருட்களைப் பொறுத்தவரை, அறையில் முதலில் ஸ்ப்ரேவைப் பயன்படுத்திய பிறகு, வாசனை மெழுகுவர்த்திகள், எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
* எண்ணெய் எரிகருவி
எண்ணெய் எரிகருவி (Oil Burner), சிறிய மெழுகுவர்த்தி பரப்புவான் (Tea light diffuser) ஆகிய இரண்டு வாசனைப் பொருட்களைப் பெரிய அறைகளில் பயன்படுத்தலாம். 10-15 நிமிடங்களில் அறையின் வாசத்தை அடியோடு மாற்றக்கூடிய இந்தச் சிறிய மெழுகுவர்த்திகள், வரவேற்பறையில் பயன்படுத்துவதற்கு உகந்தவை. ஆனால், இந்த எண்ணெய் எரிகருவியில் இருக்கும் எண்ணெய்யை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும். அறையின் அழகை மெருகேற்றுவதற்கும் இந்தச் சிறிய மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தலாம்.
* நாணல் எரிகருவி

கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் நாணல் எரிகருவி (Reed Diffuser) இயற்கை எண்ணெய்யை உறிஞ்சிய பிறகு, அதை அறையில் வாசமாகப் பரப்பும். சிறந்த நாணல் எரிகருவி, ஓர் அறையில் ஒரு மணி நேரம் வெளியிடும் வாசமானது பல நாட்களுக்கு நீடிக்கும். காற்றோட்டம் இருக்கும் இடத்தில் இதை அமைக்கும்போது இதன் வாசம் கூடுதலாக அறையில் நீடிக்கும். இந்த நாணல் எரிகருவியைப் படுக்கையறையில் பயன்படுத்துவதற்குச் சிறந்தது.
* காற்றோட்டம், வெளிச்சம் அவசியம்

நீங்கள் எப்படிப்பட்ட வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அந்த இடத்தில் காற்றோட்டம், வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம். எவ்வளவு சிறப்பான நறுமணப் பொருளாக இருந்தாலும், இயற்கையான வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லாத இடத்தில் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. அத்துடன், இந்த நறுமணப் பொருட்கள் அறையில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் உதவும்.