
ஜெனீவா அமர்வில் விஜித ஹேரத் உரை
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றினார்.
அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில், இலங்கை மனித உரிமைகளுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்களை வலுப்படுத்துவதாகவும், வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் உரையாற்றுகையில் சுட்டிக்காட்டினார்.
“எங்கள் நோக்கம், அரசியலமைப்பு சட்டகத்திற்குள் உள்ள உள்நாட்டு பொறிமுறைகளை நம்பகமான மற்றும் வலுவான நிலைக்கு கொண்டு வருவதாகும்” என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கை சமூகத்தில் பதற்றங்களை ஏற்படுத்தும் இனவாதம் மற்றும் மதவாதம் காரணமாக எழும் வன்முறைச் செயல்களை விசாரணை செய்ய அதிகாரமளிக்கப்பட்ட சத்தியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான திட்டமும் அதில் அடங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.