காசா நகரில் இஸ்ரேல் பாரியதாக்குதல்பல முனைகளால் டாங்கிகள் முன்னேற்றம் !

காசா நகரில் இஸ்ரேல் பாரியதாக்குதல்பல முனைகளால் டாங்கிகள் முன்னேற்றம் !

காசா நகர் மீது இஸ்ரேலிய படை நேற்று (08) சரமாரித் தாக்குதல்களை
நடத்தியதோடு நகரின் மையப்பகுதியை நோக்கி பல முனைகளில் இருந்து
டாங்கிகள் முன்னேறி வந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இங்கு நடத்தப்படும் கடுமையான தாக்குதலாக இது உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் பல டஜன் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சத்தை
வெளியிட்டிருக்கும் காசா சிவில் அவசர சேவை பிரிவு, நகரின் கிழக்கு
மற்றும் மேற்குப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெறுவதால் மீட்புக் குழுவினரால் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் அமைந்திருக்கும் காசா நகரின் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் குண்டுகள் வீசப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல அடுக்குமாடிக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய டாங்கி ஒன்று மக்களை மத்தியதரைக் கடலுக்கு அருகில் மேற்கு வீதியை நோக்கி தள்ளியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘எதிரிகள் எமக்குப் பின்னால் இருப்பதோடு கடல் எமக்கு முன்னால் இருக்கும் நிலையில் நாம் எங்கே போவது?’ என்று காசா நகர குடியிருப்பாளர் ஒருவரான அப்தல் கனி என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

‘டாங்கிகளில் இருந்து செல் குண்டுகளும் விமானங்களில் இருந்து ஏவுகணைகளும் எரிமலை ஒன்று போல வீதிகள் மற்றும் வீடுகளில் விழுந்து வருகின்றன. மக்கள்
அனைத்துத் திசைகளிலும் ஓடுகிறார்கள்.

எங்கே செல்வது என்று யாருக்கும் தெரியவில்லை’ என்று சாட் செயலி வழியாக அப்தல் கனி குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போராளிகளின் உட்கட்டமைப்புகளுக்கு எதிராக படைநடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

காசா போர் பத்தாவது மாதத்தை எட்டி இருக்கும் நிலையில்
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஒன்றை மத்தியஸ்தர்களான எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதல்களில் 1,200 பேர் கொல்லப்பட்டு சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டதை அடுத்து வெடித்த போரில் இஸ்ரேலின் தாக்குதல்களில் தினசரி கணிசமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி
நேரத்தில் இவ்வாறான தாக்குதல்களில் குறைந்தது 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,193ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய டாங்கிகள் குறைந்தது மூன்று திசைகளால் முன்னேறி வருவதாக காசா நகர குடியிருப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய படை வான் மற்றும் தரை வழியாக கடுமையாக தாக்குதல் நடத்தும் நிலையில் டாங்கிகள் காசா நகரின் மையப்பகுதியை அடைந்திருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பன இடங்களை நோக்கி சென்றபோதும் அவ்வாறான பாதுகாப்பான இடத்தை கண்டறிய முடியாத நிலையில் பலரும் வீதி ஓரங்களில் உறங்குவதாக கூறப்படுகிறது.

காசா நகரில் உள்ள அல் அஹ்லி அரபு பப்டிஸ்ட் மருத்துவமனையில் ஏற்கனவே மக்கள் நிரம்பி இருக்கும் நிலையில் அவர்கள் அங்கிருந்து இந்தோனேசிய மருத்துவ மனைக்கு அப்புறப்படுத்தப்பட்ட தாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு புறநகர் பகுதியான சுஜையாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் நான்கு
பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படை நடவடிக்கை குறித்து முன்கூட்டியே பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு வீதிகள் திறக்கப்பட்டிருப்பதாகவும்
இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இங்கு ஹமாஸ் மற்றும் அதன் கூட்டணியான இஸ்லாமிய ஜிஹாத்
போராளிகள் இஸ்ரேலிய படையுடன் கடுமையாக சண்டையிட்டு
வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு காசா நகரில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக மோட்டார் குண்டு தாக்குதல்களை நடத்தியதாக பலஸ்தீனிய பத்தா அல் அக்ஸா தியாகப் படை தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த எதிர்பார்ப்பு அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவின் முக்கிய
அம்சம் ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பு இணங்கிய நிலையில் போர் நிறுத்தம் ஒன்று
பற்றி காசா குடியிருப்பாளர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது இஸ்ரேல் தனது தூதுக் குழுவை பேச்சுவார்த்தை மேசைக்கு
அனுப்புவதற்கு வழிவகுத்துள்ளது.

இதில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு
முன்னர் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் உறுதி அளிக்க
வேண்டும் என்ற நிபந்தனையையே ஹமாஸ் கைவிட்டுள்ளது.

இதற்கு பதில் ஆறு வார முதல் கட்ட பேச்சுவார்த்தை
ஊடாக அதனை அடைய ஹமாஸ் இணங்கி இருப்பதாக
அந்த அமைப்பை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும் இந்த உடன்படிக்கை போரின் இலக்குகள் நிறை வேறும் வரை இஸ்ரேல் போர் இடுவதை தடுக்கக் கூடாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போருக்கான இலக்குகளாக ஹமாஸ் அமைப்பின் படைப்பலம்
மற்றும் அரச திறனை ஒழிப்பது மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்பது ஆகிய விடயங்களை இஸ்ரேல் முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

இஸ்ரேலிய தாக்குதல்களை இப்போது நிறுத்துவது பாரிய தவறு ஒன்றாக இருக்கும் என்று இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசாலல் ஸ்மொட்ரிச் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்மொட்ரிச் யூதக் குடியேற்ற ஆதரவு கட்சியின் தலைவர் என்பதோடு அந்தக் கட்சி இஸ்ரேலிய கூட்டணி அரசின் அங்கமாக உள்ளது.

எக்ஸ் சமூகதளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், ‘ஹமாஸ் வீழ்ச்சி கண்டு போர் நிறுத்தத்திற்கு மன்றாடி வருகிறது. எதிரியை நசுக்கி தகர்க்கும் வரை கழுத்தை
நெறிக்கும் நேரம் இது.

அதனை முடிப்பதற்கு முன்னர் இப்போது நிறுத்தினால் அவர்கள் மீண்டு
எமக்கு எதிராக மீண்டும் போராடுவார்கள்.

இது அர்த்தமற்ற முட்டாள்தனமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )