காசா படுகொலைகளில் பலி 112 ஆக அதிகரிப்பு !

காசா படுகொலைகளில் பலி 112 ஆக அதிகரிப்பு !

காசாவில் மனிதாபிமான வலயங்களில் இஸ்ரேல் நடத்திய பயங்கர
தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்திருப்பதோடு இந்த சம்பவத்தை அடுத்து போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் இருந்து ஹமாஸ் அமைப்பு விலகிக் கொண்டுள்ளது.

கான் யூனிஸ் நகரில் உள்ள மவாசி அகதி முகாம் மற்றும் காசா நகரில்
உள்ள சட்டி முகாம்கள் மீதே இஸ்ரேல் நேற்று முன்தினம் (13) கடுமையான தாக்குதல்களை நடத்தியது.

இதில் பாதுகாப்பு வலயம் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் மவாசியில் இடம்பெயர்ந்த
மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் குறைந்தது 92 பேர் கொல்லப்பட்டு 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து சட்டி அகதி முகாமில் நண்பகல் தொழுகைக்காக மக்கள் ஒன்றுகூடி இருந்தபோது தொழுகை மண்டபத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் ஆயுதப் பிரிவுத்தலைவர் முஹமது தெயிப் மற்றும் பிரதித் தலைவர் ரபா சலமா ஆகியேரை இலக்கு வைத்தே மவாசியில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இந்த இருவரும் கொல்லப்பட்டனர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்
பில் தெரிவித்துள்ளார்.

‘எப்படி இருந்தாலும், ஹமாஸின் அனைத்து தலைவர்களையும் நாம் பிடிப்
போம்’ என்றார் நெதன்யாகு.

எனினும் தெயிப் கொல்லப்படவில்லை என்று மறுத்த ஹமாஸ் அமைப்பு, தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு இந்தப் பொய்யான கூற்றை இஸ்ரேல் கூறுவதாக குற்றம் சாட்டியது.

கடந்த பல வாரங்களில் காசாவில் இடம்பெற்ற அதிக உயிரிழப்புக் கொண்ட தாக்குதலாக இது இருந்தது.

இந்தத் தாக்குதல் பூகம்பம் ஒன்று போல் இருந்ததாக அல் மவாசியைச் சேர்ந்த ஒருவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திடம் விபரித்துள்ளார்.

தாக்குதலின் அதிர்வால் கூடாரங்கள் சிதைந்திருப்பதோடு உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் தரையில் சிதறுண்டு கணப்பட்டதாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

‘அனைத்துக் கூடாரங்களும் வீழ்த்தப்பட்டிருந்தோடு உடல் பாகங்கள், உடல்கள் எல்லா இடங்களிலும் காணப்பட்டன.

வயது முதிர்ந்த பெண் ஒருவர் தரையில் வீசப்பட்டிருந்தார்.

சிறுவர்களின் உடல்கள் சிதறுண்டு காணப்பட்டனர்’ என்று அல் மவாசியில் அடைக்கலம் பெற்றிருக்கும் காசா நகரைச் சேர்ந்த ஷெய்க் யூசப் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு கான் யூனிஸில் உள்ள நாசர் மற்றும் அமல் மருத்துவ
மனைகள் மற்றும் ரபா நகரில் உள்ள குவைட்டி மருத்துவனை நிரம்பி
வழிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

பொது மக்களின் உயிரிழப்புகளைக் கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் எந்த இடமும் பாதுகாப்பு இல்லை என்று கூறிய அவர் அங்கு
சர்வதேச மனிதாபிமான சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் இலக்கு வைத்த முஹமது தெயிப் இஸ்ரேலினால் பல தசாப்தங்களாக தேடப்பட்டு வருபவர்களில் முன்னிலையில் இருப்பவர் என்பதோடு இஸ்ரேலின் பல படுகொலை முயற்சிகளில் இருந்தும் அவர் உயிர் தப்பியுள்ளார்.

‘கொமாண்டர் முஹமது தெயிப் நலமாக இருப்பதோடு அனைத்தையும் வழிநடத்தி வருகிறார்’ என்று ஹமாஸ் ஆயுதப் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள்
தொடர்ந்து இடம்பெற்றன.

காசா நகரின் யார்முக் அரங்கிற்கு அருகில் ஹாஜி குடும்ப வீட்டின் மீது
இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலை அடுத்து நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தவிர காசா நகரின் வடக்கில் வீடு ஒன்றின் மீது நேற்றுக் காலை இடம் பெற்ற தாக்குதல்களில் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 141 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று (14) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,584 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 88,881 பேர் காயமடைந்துள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக மத்தியஸ்தம் வகிக்கும் எகிப்து மற்றும் கட்டாரில் இடம்பெற்று வந்த நிலையில்
பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் படுகொலைகள் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் வெளியிடப்பட்ட போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படும் என்று
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்களிடம் குறிப்பிட்டிருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் போர் நிறுத்த பேச்சில் இருந்து வெளியேறவில்லை என்று ஹமாஸின் மற்றொரு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )