வடக்கு – கிழக்கு தமிழர்களின் வாக்குகளால்தான் இந்த தடவை ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் !
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளால்தான் இம்முறை ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்
சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தற்போது இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளார் என நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது.
இப்படியானவர்களையா நாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கவுள்ளோம்? பிரதான வேட்பாளர்கள் ஒரு வாக்காளாருக்கு 300 ரூபா வுக்கு மேல் செலவளிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிடம் அனுமதி கோருகின்றனர்.
அப்படியினால் இவர்களுக்கு மில்லியன் கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது? மக்கள் மீது உள்ள அக்கறையிலா இவர்கள் இவ்வளவு பணத்தைச் செலவளிக்க ஆர்வமாக இருக்கின்றனர்?
நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற ரணிலின் கூட்டத்தில் பங்குபற்றியோருக்கு தலா ஆயிரம் ரூபா காசும் பிரியாணிச் சாப்பாடும், களவாகக் கால் போத்தல் சாராயமும் வழங்கியுள்ளனர்.
அநுரகுமாரவும் அப்படித்தான். இவர்கள் எல்லாம் மக்களுக்காகப் பாடுபடுபவர்கள் அல்லர் என்பதை மக்கள் நன்கு உணர்வார்கள்.
தற்போது ரணிலின் கூட்டங்களில் நிற்பவர்கள் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களும், அலிசப்றி ரகீம் போன்ற தங்கம் கடத்தியவர்களுமே. தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி. கட்சியினர் எவ்வாறு தமிழர்கள் மத்தியில் வாக்கு கேட்டு வருவது?
சிந்தித்துப் பாருங்கள். தற்போது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகச்
செயற்படும் ஒரு கட்சி எமது ஐக்கிய சோசலிச சட்சி மாத்திரமே. தமிழ் மக்கள் கோரும் நியாயமான கோரிக்கையைத் தீர்க்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
ரணில் எதிர்வரும் தை மாதம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறுகின்றார். அப்படியானால் அவரால் ஏன் அதை இப்போது செய்ய முடியவில்லை?
அதை நாம் ஏமாற்று வித்தையாகவே பார்க்க வேண்டும்.
ஜே.வி.பி.யினர் தற்போது ஒவ்வொரு 3 கிலோ மீற்றருக்கும் ஒரு தேசிய பாடசாலை அமைக்கவுள்ளனர் எனக் கூறுகின்றனர்.
இதெல்லாம் எந்தளவிற்கு சாத்தியம்? அப்படியானால் அனைவரும் எமது மக்களை ஏமாற்றவே பார்க்கின்றனர்.
பாரம்பரிய தமிழ் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துத்து, தமது நலனுக்காகவே ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கின்றனரே ஒழிய தமிழ்
மக்களின் நலனுக்காக அல்ல.’ என ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.