தேர்தல் பிரசாரத்தில் 100 அரச அதிகாரிகள்
விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் 100 அதிகாரிகள் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு மையத்தின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான அகலங்க உக்வத்த கேவால் கையொப்பமிடப்பட்டு வெளியான ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் விமான நிலைய பாதுகாப்புப்பிரிவிற்கு புதிய நியமனங்களாக சேர்த்துக் கொள்ளப்பட்ட சுமார் 100 அதிகாரிகளுக்கு கடந்த நாட்களில் 72 இலட்சம் ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த பயிற்சியின் பின்னர் இவர்கள் அனைவரும் கட்டுநாயக்கவுக்கு அழைத்து வரப்பட்டு விடுப்பு விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்காக பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக தேசிய
மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையம் முறைப்பாடு செய்துள்ளது.
சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் தனது ஜனாதிபதி தேர்தல் பிரசார
நடவடிக்கைகளுக்காக பொது வளங்களையும் அரச அதிகாரிகளையும் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட உரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இதனை கட்டுப்படுத்தி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.