செப்டம்பர் முதல் 3,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு !

செப்டம்பர் முதல் 3,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு !

அரசாங்க சேவையில் அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக 3,000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன்
அரசாங்க சேவையில் ஓய்வூதியக்காரர்களுக்கு மொத்தமாக 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்படுமென்றும், அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர் சம்பளத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை பரிசீலித்து தொடர்புடைய எதிர்கால திருத்தங்களை செய்வதற்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி யூ.ஆர்.செனவிரத்ன தலைமையில் நிபுணர் குழு அண்மையில் நியமிக்கப்பட்டதாகவும் மீளாய்வின் அடிப்படையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட சம்பள கட்டமைப்பை அமுல்படுத்தும்வரை ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்கவுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க சேவை ஓய்வூதியக்காரர்களில் தற்போது சுமார் 7 இலட்சம் பேர் ஓய்வூதியம் பெறுவதாகவும் இதற்கமைய 2024ஆம் ஆண்டில் இந்த இடைக்கால கொடுப்பனவை
வழங்குவதற்கு அரசாங்கம் 8.4 பில்லியன் ரூபா மேலதிக செலவீனத்தை சுமக்க நேரிடுமென்றும், இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடன் நிர்வகிப்பதில் சவால்கள் இருந்த போதிலும், ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்கள் தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு அரசாங்கம் வழங்கும் விரைவான குறுகியகால தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் அரசாங்க ஓய்வூதியக்காரர்களின் கூட்டு தேசிய அமைப்பின் அதிகாரிகளுக்கிடையில் நேற்று (02)
விசேட சந்திப்பு நடைபெற்றதுடன், ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்கி சிரேஷ்ட பிரஜைகளின் வட்டிவீதத்தை அதிகரிப்பது தொடர்பிலும்கலந்துரையாடப்பட்டது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )