ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை

ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்றாக்கப்பட்டு உள்ளது.

இதை அந்நாட்டு அரசு கடுமையாக செயல்படுத்தி வருகிறது. அதேநேரம் சமீப காலமாக அங்குள்ள பெண்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஹிஜாப் விதியை நீக்க வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே ஹிஜாப் விதியை மீறும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மனநல சிகிச்சை மையத்தைத் திறக்க உள்ளதாக ஈரான் அரசு சர்ச்சை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்காக ஹிஜாப் சிகிச்சை கிளினிக் நிறுவப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குடும்பத் துறையின் தலைவரான மெஹ்ரி தலேபி தரேஸ்தானி கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இந்த கிளினிக்குகள் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு அறிவியல் மற்றும் உளவியல் சிகிச்சையை வழங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஈரான் அரசின் நல்லதை வளர்ப்பதற்கும், தீமையை ஒழிப்பதற்குமான அரசு அமைப்பு இந்த கிளினிக்கின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் என்று கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஈரானிய பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி ஆடைக்கப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உள்ளாடைகளுடன் வந்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகமும், அரசும் அந்தப் பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்று முத்திரை குத்தியது. அந்த மாணவி யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் ஈரான் அரசின் இந்த அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக ஈரான் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹுசைன் ரைசி கூறுகையில், “ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அமைப்பது என்பது ஈரான் சட்டத்திற்கு மட்டுமின்றி இஸ்லாமிய சட்டத்திற்குமே எதிரான ஒன்று” என்று அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)