தைப்பூசம் வரலாறு

தைப்பூசம் வரலாறு

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கி செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகை பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவி, ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களை காப்பாற்றினான்.

தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

முருகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)