புதிய கல்வி மறுசீரமைப்பை 2026ஆம் ஆண்டு தொடங்குவதற்கு நடவடிக்கை

புதிய கல்வி மறுசீரமைப்பை 2026ஆம் ஆண்டு தொடங்குவதற்கு நடவடிக்கை

புதிய கல்வி மறுசீரமைப்பை 2026ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், 2025ஆம் ஆண்டுக்குள் அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் கௌரவ பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளனர்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அவருடைய தலைமையில் கடந்த 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்னவும் கலந்துகொண்டார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு ஐந்து பிரதான தூண்களின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படவிருப்பதாகக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இதற்கு அமைய, புதிய பாடநெறியை அறிமுகப்படுத்தல், மனிதவளத்தை மேம்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், பொது மக்களை விழிப்புணர்வூட்டல் மற்றும் உரிய மதிப்பாய்வு மேற்கொள்ளல் போன்ற பிரதான விடயங்களின் கீழ் இந்தக் கல்வி மறுசீரமைப்பு தரம் ஒன்று முதல் தரம் ஆறு வரையான மாணவர்களுக்காக 2026ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கல்வி, உயர்கல்வி மற்றம் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுடன் இணைந்ததாக ஆறு உப குழுக்களை அமைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கு அமைய, கல்வி மறுசீரமைப்பு, பாடசாலைகளில் காணப்படும் பௌதீக மற்றும் மனித வளக் குறைபாடுகள், பாடசாலைகளில் இடைத்தர வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுமதித்தல், கல்விச் சபையை நிறுவுதல், உயர் கல்விப் பிரிவு, திறன்கல்விப் பிரிவு ஆகியவற்றின் கீழ் ஆலோசனைக் குழுவுடன் இணைந்ததாக ஆறு உப குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த அமைச்சுத் தொடர்பில் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் காணப்படும் விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கு அமைய, அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றுப்படுத்திய பிரச்சினைகளுக்குப் பதிலளித்த கௌரவ பிரதமர், பாடசாலைகள் மத்தியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பாடசாலைகளுக்குப் பௌதீக ஆய்வுகளை மேற்கொள்ளல், தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளுக்கு அவசியமான நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் பாடசாலைகளில் காணப்படும் பாதுகாப்பற்ற சூழலைப் புனரமைத்தல் போன்றவற்றுக்காக இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)