
வீடு திரும்பிய ஏ.ஆர்.ரகுமான்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இன்று (16) காலை நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது.
இதனிடையே ஏ.ஆர்.ரகுமான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! என்று எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார். இதனிடையே, ஏ.ஆர்.ரகுமானுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை நீரிழப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் வழக்கமான பரிசோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.