இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகம்

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகம்

Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 3ஆம் திகதி திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது. 

சோமாலியாவில் இருந்து பெறப்பட்ட கோரிக்கை பிரகாரம் 24 மீற்றர் கொண்ட இந்த பிரமாண்ட மீன்பிடி படகு சர்வதேச தரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தென் கொரியா, கென்யா, சுவீடன் மற்றும் நார்வே உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு மீன்பிடி படகுகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது Danusha Marine. 

இங்கு கருத்து தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கடந்த 3 மாதங்களாக கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்ததாகவும், அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்கள் கடந்த காலங்களில் பெரும் பின்னடைவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். 

90 வீதமான பணியாளர்கள் திறமையும் அனுபவமும் கொண்டவர்களாக இருந்த போதிலும் அரசியல் அழுத்தங்களினால் அவர்களின் செயற்திறனை சரியான முறையில் பயன்படுத்த முடியவில்லை என அமைச்சர் வருத்தத்துடன் தெரிவித்தார். எனினும், தற்போது நல்ல தலைமைத்துவம் இருப்பதால், அமைச்சின் ஊழியர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், அரசியல் அழுத்தங்கள் இன்றியும் திறமையாக சேவையாற்ற தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

Danusha Marine கம்பனியின் தலைவர் சுமித்ரா பெர்னாண்டோ போன்ற திறமையான தொழில் முயற்சியாளர்கள் நாட்டுக்கு தேவை என அவர் மேலும் தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான மீன்பிடி படகுகள் மாத்திரமன்றி பாரிய கப்பல்களையும் இந்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, இலங்கை சிறந்த மனித வளங்கள் நிறைந்த நாடாக விளங்கும் அதேவேளை, புவிசார் அரசியல் அமைவிடத்தின் அடிப்படையில் இலங்கையானது உலகில் தனித்துவமிக்க நாடாகும் என சுட்டிக்காட்டினார். மேலும், மீன்பிடி படகுகளை உற்பத்தி செய்யும் திறன் இலங்கைக்கு உண்டு என்பதை இவ்வாறான மீன்பிடி படகுகளின் உற்பத்தி உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவும், அடுத்த கட்டமாக இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடி படகுகளை உள்ளூர் மீன்பிடித் தொழிலுக்கு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி வலியுறுத்தினார். மேலும், அடுத்தகட்டமாக உள்ளூர் கப்பல்கள் தயாரிப்பிலும் ஈடுபட வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தனுஷ மரைன் லங்கா நிறுவனத்தின் தலைவர் சுமித்ரா பெர்னாண்டோ, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் திரு.சம்பத் மந்திரிநாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சுசாந்த கஹாவேஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)