
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார் என்பது எனக்கு தெரியும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று (06) கண்டிக்கு சென்றிருந்த ஞானசார தேரர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் பிரதான சூத்திரதாரியொருவர் இருக்கின்றார் எனக் கூறினார்கள். அவரை தற்போது தேடுகின்றனரா ? பிரதான சூத்திரதாரி யாரென்பது எனக்கு தெரியும் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ள தரப்பினரிடம் கூறிய பின்னரே அது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவேன்.
பிரதான சூத்திரதாரி இருந்த இடம், அவர் பழகிய நபர்கள், சஹ்ரானை பயிற்சிவித்த விதம் என்பன உள்ளிட்ட தகவல்கள் எனக்கு தெரியும்.” என தெரிவித்துள்ளார்.