மக்களை ஏமாற்றுபவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும் !

மக்களை ஏமாற்றுபவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கும் !

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்துவிட்டு, நாட்டு மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

களுத்துறை பண்டாரகம நகரில் நேற்று (17) இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று பல தரப்பினர் ஒன்றிணைந்துள்ளனர், அதில் வைன் ஸ்டோர்ஸ், மதுபான அனுமதிப்பத்திரம் போன்ற வரப்பிரசாதங்களுக்கு அவர்களை பலியெடுத்துள்ளனர். நான் ஜனாதிபதியான பின்னர் அவ்வாறு மோசடியாகவும் இலஞ்சமாகவும் வழங்கப்பட்ட அனைத்து அனுமதி பத்திரங்களையும் இரத்து செய்வேன்.

அரசியல் இலஞ்சத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறான தவறுகளை செய்யாமல் சிந்தித்து செயல்படுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

எவரேனும் ஒருவர் கொள்கை திட்டத்துடனும் வழிகாட்டல்களுடனும் அரசியல் பயணங்களை முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடனும் இணைந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் பணத்துக்காகவும் ஊழலுக்காகவும் மோசடி களுக்காகவும் இணையவில்லை. சிறந்த கொள்கை திட்டத்துடன் இணைந்து கொண்டிருக்கின்றனர. இந்த ஊழல் மிக்க திருட்டுத்தனமான அரசியலை நிறுத்த வேண்டும் .

தனி மனிதன் திருந்தாமல் நாட்டை திருத்த முடியாது என்று பஞயாசிக தேரர் குறிப்பிட்டாலும், இன்று நாட்டில் ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்களும் அவர்களின் சகாக்கள் கூட்டமும் ஒன்றாக இணைந்து கொண்டு சுகபோக வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக செயல்படுகிறார்கள்.

220 இலட்சம் மக்களின் முன்னேற்றமே ஐக்கிய மக்கள் சக்தி அபிவிருத்தி என்பதாக காண்கின்றது. அபிவிருத்தி என்று தொகைகளை காண்பித்து பயனில்லை. அபிவிருத்தியை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும். அதன் பிரதி பலனை அனுபவிக்க வேண்டும் .

இன்று சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ளவர்கள் மாத்திரமே அனுபவிக்கின்றனர். ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மாத்திரமே அனைத்து சுகபோகங்களை அனுபவிக்கின்றனர்.

220 இலட்சம் மக்களும் அநாதைகளாக கைவிடப்பட்டிருக்கின்றனர். தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை வழங்கி இந்த முறையும் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னரும் மக்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை.

இந்த நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார். பொருளாதார வீழ்ச்சி பொருளாதாரக் கொலைகள் ஊடாக நாட்டை சீரழித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அபிவிருத்தியின் தளிர்களை பெற்றுத் தருவதற்கும் தாம் தயார்.

அதேபோன்று நாட்டை மேலும் வலுப்படுத்துவதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறேன். எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு “பிரபஞ்சம்” “மூச்சு” திட்டங்கள் ஆகியவற்றின் ஊடாக மக்களுக்கு சேவை செய்ததைப் போன்று, ஆட்சியைப் பெற்றுக் கொண்ட பின்னரும் மக்களுக்காக சேவை செய்வேன். இவை அனைத்தும் அரசாங்க பணத்தில் இருந்து செய்யப்படவில்லை. நன்கொடைகள், உதவிகள் என்பனவற்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டன. இந்த நாட்டை கட்டி எழுப்புவதென்றால் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். பிரபஞ்சம், மூச்சு போன்ற வேலை திட்டங்களின் ஊடாக ஊழல் மோசடி திருட்டு என்பன இடம் பெறவில்லை என்பதால் பெருந்தொகையானவர்கள் இதற்கு உதவிகளை வழங்க தயாராக இருந்தனர் .

அரகலய போராட்டத்தின் பின்னர் அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். ஆனாலும், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்கு பாரிய சேவைகளை செய்திருக்கிறது. மத்திய வங்கியை சுயாதீன கட்டமைப்பாக மாற்றுவதற்கு இலஞ்ச ஊழல் சட்டமூலத்தை விட புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்தேன். ஊழலை தடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பாரிய வேலை திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது.

இந்த நாட்டுக்கு வெட்டிப் பேச்சுக்கள் அவசியம் இல்லை. காட்சிப்படுத்தல் அவசியமில்லை. அபிவிருத்தி தான் தேவை. சொல்வதைச் செய்வதை நடைமுறையில் ஒப்புவித்துள்ளேன். அபிவிருத்தி யுகத்தை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்துடன் அனைத்து துறைகளையும் முன்னேற்றம் அடைய செய்து, புதிய தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கி, உற்பத்தியின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்’ என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )