காசா போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மும்முரம் !

காசா போர் நிறுத்தத்தில் அமெரிக்கா மும்முரம் !

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சிறந்த மற்றும் கடைசி வாய்ப்பாக இது இருக்கக் கூடும் என்று பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஆரம்பமான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நீடிப்பதோடு காசாவில் மோதல் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையிலேயே பிளிங்கன் பிராந்தியத்திற்குச் சென்றுள்ளார்.

கடந்த ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்த பின்னர் ஒன்பதாவது முறையாக மத்திய கிழக்கு சென்றிருக்கும் பிளிங்கன் நேற்று (19) இஸ்ரேல் ஜனாதிபதி இசாக் ஹெர்சொக்கை சந் தித்துப் பேசினார்.


‘ஒக்டோபர் 7 தொடக்கம் இது எனது ஒன்பதாவது இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிற்கான பயணமாக உள்ளது.

இது ஒரு தீர்க்கமான தருணமாகும். பணயக்கைதிகள் வீடு திரும்புதவற்கான பெரும்பாலும் சிறந்த, சிலவேளை கடைசி வாய்ப்பாக இது இருக்கக் கூடும்’ என்று இஸ்ரேல் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் பிளிங்கன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மரதன் பேச்சுவார்த்தை கடந்த பல மாதங்களாக எந்த முடிவும் இன்றி நீடித்த நிலையில் புதிய சுற்று பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டொஹாவில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் இடம்பெற்றது.

தற்போது அந்தப் பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட முன்மொழிவு ஒன்றின் அடிப்படையிலேயே தற்போதைய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் முயற்சியிலேயே அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

போர் நிறுத்தம் நெருங்கி இருப்பதாகவும் அடுத்த வாரத்தில் அதனை எட்ட வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்து வருகிறது.

எனினும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதைத் தடுத்து வருவதாக இஸ்ரேல் மற்றும் காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. ஹமாஸ் அமைப்பு கடந்த ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில், உடன்பாடு
ஒன்றை எட்டுவதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யா கு தடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

போரை தொடரும் நோக்குடன் அவர் புதிய நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை விடுத்திருப்பதாகவே ஹமாஸ் குற்றம்சாட்டுகிறது.

‘மத்தியஸ்தர்களின் முயற்சிகளை முறியடிப்பதற்கும், போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதை தடுப்பதற்கும் அவரே முழு பொறுப்பாவார்’ என்று ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது.

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றுக்கும் காசாவில் இருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறுவதற்கும் ஹமாஸ் வலியுறுத்தி வருகிறது.

காசாவின் எகிப்துடனான எல்லையான ரபா கடவை, நெட்சரிம் சந் தி மற்றும் பிலடெல்பியா எல்லைப் பகுதிகளின் பல்வேறு மூலோபாய இடங்களில் தொடர்ந்து நிலைகொள்ள இஸ்ரேல் விரும்புகிறது.

நெட்சரிம் தளங்கள் வடக்கு மற்றும் தெற்கு காசாவுக்கு இடைப்பட்ட பகுதி என்பதோடு எகிப்துடனான எல்லையில் இருக்கும் ரபா கடவை மற்றும் பிலடெல்பியா எல்லைப் பகுதி ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசாவுக்கு ஆயுதங்கள் செல்வதை தடுப்பதற்கு முக்கியமானது என்று இஸ்ரேல் கருதுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய நெதன்யா கு, பணயக்கைதிகளை மீட்பதற்கான சிக்கலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சில கொள்கைகள்
தேவையாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘சில விடயங்களில் எம்மால் நெகிழ்வுப் போக்கை காண்பிக்க முடியும் என்றபோது சில விடயங்களில் நெகழ்வுப் போக்கை காண்பிக்க முடியாது. அதனை நாம் அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம். இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் எமக்கு
நன்றாகத் தெரியும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தையில் ஹமாஸ் ‘பிடிவாதமாக’ இருப்பதாகவும் அதன் மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் கடந்த சனிக்கிழமை பி.பி.சி. செய்தி நிறுவனத்திடம் பேசியபோது,

‘மத்தியஸ்தர்களிடம் இருந்து எமக்குக்கிடைத்த செய்தி அதிருப்தி தருகிறது. இதில் (பேச்சுவார்த்தையில்) எந்த முன்னேற்றமும் இல்லை’ என்றார்.

ஹமாஸ் அமைப்பு புதிய சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்காதபோதும் பேச்சுவார்த்தை முடிவுகள் மத்தியஸ்தர்களால் அந்த அமைப்பின் கட்டார் அலுவலகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அன்டனி பிளிங்கன் நேற்று பின்னேரம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யா குவை சந்தித்ததோடு தொடர்ந்து போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ள கெய்ரோ பயணமாகியுள்ளார்.

அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் அமெரிக்க அரசு தீவிரம்காட்டி வருகிறது.

மறுபுறம் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் மீது பழி தீர்ப்பதாக ஈரான் எச்சரித்து வரும் நிலையில் பிராந்தியத்தில் போர் பரவும் அச்சுறுத்தலை தவிர்க்கவும் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தீர்க்கமானது என்று பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் காசாவில் 318 ஆவது நாளாகவும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் இடம்பெற்றன.

மத்திய காசாவின் டெயர் அல் பலாஹ்வில் இஸ்ரேலியப் படை மற்றும் பலஸ்தீன போராளிகள் இடையே தரைவழி மோதம் உக்கிரம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கு இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய வான் தாக்குதலில் ஒட்டுமொத்த பலஸ்தீன குடும்பம் ஒன்று கொல்லப்பட்டுள்ளது. உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் கொண்ட குடும்பத்தினரே கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தெற்கு நகரான ரபாவின் அல் ஷகூரா பகுதியில் இஸ்ரேலின் குண்டு வீச்சில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது. இஸ்ரேலிய உளவு விமானம் குழு ஒன்றை இலக்கு வைத்து குண்டு வீசியதாக அந்த செய்தி கூறுகிறது.

கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,130 ஆக அதிகரித்துள்ளது.

92,743 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிடுகிறது.

பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேலின் பிரதான நகராக டெல் அவிவில் நேற்று முன்தினம் இரவு குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் அந்த குண்டை கொண்டுவந்தவர் தவறுதலாக வெடிக்கச் செய்ததில் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடத்த வந்தவர் மேற்குக் கரையைச் சேர்ந்த பலஸ்தீனர் ஒருவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் லெபனான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதோடு தெற்கு லெபனானில் உள்ள ஹெலா சிறு நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் கிட்டத்தட்ட தினசரி பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அது முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )