“ஜனாதிபதியாக கனவு காண்பவர் அவதானிக்கவும்”

“ஜனாதிபதியாக கனவு காண்பவர் அவதானிக்கவும்”

ஜனாதிபதியாகக் கனவு காண்பவர்கள் அனைவரும் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சுயாதீன எதிரணி எம்.பியுமான விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், கொழும்பு துறைமுக அபிவிருத்தி நகரத்துக்குச் சீனாவே முழுமையாக முதலீடு செய்துள்ளது.

ஆகவே துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.அவ்வாறான நிலையில் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணித்தால் சீகிரியா குன்றில் உள்ள கற்களைப் பெயர்த்து எடுக்க நேரிடும் என்று குறிப்பிட்டவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்ற கலவரத்துக்கும் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்துக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன . பங்களாதேஷ் நாட்டில் காலம் காலமாக அமுல்படுத்தப்படும் கோட்டா முறைமைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கோட்டா முறைமையை நீதிமன்றம் திருத்தியமைத்த தன் பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு வன்முறைகளில் ஈடுபட்டார்கள். போராட்டம் தீவிரமடைந்தததால் ஷேக் ஹஸீனா இந்தியாவுக்கு தப்பியோடியதன் பின்னர் ஊடகங்களுக்கு ஒரு விடயத்தைப் பகிர்ந்துள்ளார்.

பங்களாதேஸுக்கு சொந்தமான தீவு பகுதி ஒன்றை அமெரிக்கா கோரியது அதற்கு இடமளித்திருந்தால் போராட்டம் தோற்றம் பெற்றிருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஒரு மண்டலம் ஒரு பாதை அபிவிருத்தி செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் உள்ளக முரண்பாடுகளும், போராட்டங்களும் திட்டமிட்ட வகையில் தோற்றுவிக்கப்படுகின்றன.

பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த நிலைமையே காணப்பட்டது. ஆகவே, ஜனாதிபதியாகக் கனவு காண்பவர்கள் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )