9 மாகாணங்களிலும் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்தது ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பு குழு !

9 மாகாணங்களிலும் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஆரம்பித்தது ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பு குழு !

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தேர்தல் கண்காணிப்புக்குழுவில் உள்ளடங்குகின்ற நீண்டகாலக் கண்காணிப்பாளர்கள் 26 பேர் கண்காணிப்புப்பணிகளுக்காக நேற்று நாட்டின் 9 மாகாணங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வழமைபோன்று இம்முறையும் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ அழைப்பொன்றை விடுத்திருந்தது.

அவ்வழைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து இம்மாதத் தொடக்கத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இதுகுறித்த நிர்வாகமட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அதற்கமைய பிரதி தலைமைக் கண்காணிப்பாளர் ஒருவரையும், தேர்தல் கண்காணிப்பு நிபுணர்கள் 9 பேரையும் கொண்ட குழுவொன்று கடந்த 13 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

அதேவேளை நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த 26 நீண்டகாலக் கண்காணிப்பாளர்கள் நேற்று வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நச்சோ சன்செஸ் ஆமரால் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இருந்து நாட்டின் 9 மாகாணங்களுக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகப் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டனர்.

தமது கண்காணிப்புக்குழுவில் நீண்டகாலக் கண்காணிப்பாளர்களின் வகிபாகம் மிகமுக்கியமானது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் தலைமைக் கண்காணிப்பாளர் நச்சோசன்செஸ் ஆமர், ‘அவர்களது அவதானிப்புக்களும், அதனடிப்படையிலான தகவல்களும் தேர்தல் செயன்முறை தொடர்பில் பக்கச்சார்பற்ற, தரவுகளை மையப்படுத்திய மதிப்பீட்டைத் தயாரிப்பதற்கு எமக்குப் பெரிதும் உதவும்’ என்றும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி மேற்குறிப்பிட்டவாறு 9 மாகாணங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பெருநகரங்கள் மாத்திரமன்றி சிறிய கிராமங்கள்தோறும் சென்று வாக்காளர்கள், தெரிவத்தாட்சி அலுவலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுப்பர்.

அதேபோன்று பிராந்திய மட்டத்தில் தேர்தல் சார்ந்து இடம்பெறும் முகாமைத்துவம், தேர்தல் தின முன்தயாரிப்புக்கள், பிரசார நடவடிக்கைகள், தேர்தலுடன் தொடர்புபட்டதாக சிவில் சமூகங்கள் மற்றும் ஊடகங்களால் முன்னெடுக்கப்படும்

செயற்பாடுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் நீண்டகாலக்கண்காணிப்பாளர்களால் விசேடமாகக் கண்காணிக்கப்படும்.

அதன்பிரகாரம் அவர்களால் சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் கொழும்பைத் தளமாகக்கொண்டு மதிப்பீட்டுப்பணியில் ஈடுபடும் குழுவினருக்கு உதவியாக அமையும்.

அதேவேளை, மேலும் 32 பேர் அடங்கிய குறுங்காலக்கண்காணிப்பாளர் குழுவினர் தேர்தல் வாரத்தில் நாட்டை வந்தடையவிருப்பதுடன், அவர்கள் வாக்களிப்பு, வாக்கு எண்ணல் மற்றும் தேர்தல் பெறுபேறுகளை அறிவித்தல் ஆகிய செயன்முறைகளைக் கண்காணிப்பர்.

அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புநாடுகள், நோர்வே, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் நிபுணர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களை உள்ளடக்கிய இக்குழு இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் காலப்பகுதியில் சட்டக்கட்டமைப்பு மற்றும் அதன் அமுலாக்கம், தேர்தல் நிர்வாகத்தின் செயலாற்றுகை, அரச நிறுவனங்களின் வகிபாகம், வாக்காளர் பதிவு, பிரசார நடவடிக்கைகள் மற்றும் பிரசார நிதி, அடிப்படை சுதந்திரம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உறுதிப்பாடு, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு, இணையவழி தகவல் மூலங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு, வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுதல் மற்றும் அட்டவணைப்படுத்தல், முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீட்டு செயன்முறை, முடிவுகளை அறிவித்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த அம்சங்களையும் மதிப்பீடு செய்யும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்புவிடுத்தமையானது இவ்விடயத்தில் இலங்கை கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டை வெளிக்காட்டுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தலைமைக் கண்காணிப்பாளர் நச்சோ சன்செஸ் ஆமர், தாம் இலங்கையில் நடைபெறும் தேசிய தேர்தல்களைக்கண்காணிக்கும் 7 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )