இலங்கையர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு  எமது ஆட்சியின் கீழ் தீர்வு வழங்கப்படும்

இலங்கையர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு  எமது ஆட்சியின் கீழ் தீர்வு வழங்கப்படும்

வெளிநாட்டில் பணியாற்றுகின்ற இலங்கையர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு  தமது ஆட்சியின் கீழ் தீர்வு வழங்கப்படும் என, தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கான வேலைத்திட்ட வெளியீட்டு நிகழ்வு  ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (01)  இடம்பெற்ற போது, அங்கு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்,

“வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடனே மிக அதிகமானோர் வெளிநாட்டுத் தொழில்களுக்கு செல்கிறார்கள். ஒரு சிலர் தமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்காகவும், சிறந்த தொழிலை மேற்கொள்வதற்காகவும், தமது பிள்ளைகளின் சிறப்பான கல்விக்காகவும் வெளிநாடு செல்கிறார்கள். 

எனினும், பெரும்பான்மையோர் நாட்டுக்குள்ளே தொழில்வாய்ப்பு கிடைக்காமையால் வருமானத்தை ஈட்டுவதற்காக வெளிநாடு செல்கிறார்கள். தொழில்களுக்காக வெளிநாடு செல்பவர்களின் மூன்று பிரதான நோக்கங்கள் இருக்கின்றன. முதலாவது வீடொன்றை அமைத்துக்கொள்வது இரண்டாவது வாகனமொன்றை கொள்வனவு செய்வது மூன்றாவது பிள்ளைகளுக்கு கல்விபுகட்டுவது. 

குறிப்பாக மத்தியக்கிழக்கு நாடுகளில் குவைத், கட்டார், அபுதாபி போன்ற நாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களாக அல்லது உழைப்பாளிகளாக போகின்றவர்களின் பிரதான நோக்கங்கள் அவ்வாறானதாக அமைந்துள்ளன. 
ஆனால் பெரும்பாலானவர்களின் வீடொன்றை அமைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பு ஈடேறவில்லை. தொலைத்தூர கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் அரைகுறையாக அமைத்த வீடுகள், பகுதியளவில் கூரை வேயப்பட்ட வீடுகள், பகுதியளவில் சுவர் எழுப்பப்பட்ட வீடுகள் இருக்கின்றன. 

குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்பவர்கள் திரும்பி வந்து வீட்டை கூட அமைத்துக் கொள்வதில் வெற்றி பெறவில்லை. எனவே  அவர்களுடைய கனவினை நிறைவேற்றிக்கொள்வதற்கான சலுகைக் கடன் திட்டமொன்றையும் அதனை மேற்பார்வை செய்வதற்கான வேலைத் திட்டத்தையும் நாங்கள் அமுலாக்குவோம். 


தாய்மார்கள் வெளிநாடு செல்லும்போது பெரும்பாலும் பாட்டியிடமே பிள்ளையை ஒப்படைத்துவிட்டு போகிறார்கள். பாட்டி வேறொரு தலைமுறையை சோ்ந்தவர். புதிய தலைமுறையின் கருத்துக்கள், நடத்தைப்போக்குகள் புரிந்துணர்வு இவர்களுக்கு கிடையாது. 

தகப்பன் நாசமாகி வேறொரு பக்கம் போய்விடுகிறார். எனவே பிள்ளையின் கல்வியும் வெற்றியடையவில்லை. எனவே எங்களுடைய கல்வித்திட்டத்திலே வெளிநாடு சென்றுள்ளவர்களின் பிள்ளைகளின் கல்வி எதிர்பார்ப்பினை எவ்வாறு ஈடேற்றுவது என்பதை நாங்கள் உள்ளடக்கியிருக்கிறோம். 

பாடசாலை செல்லாத பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை நாங்கள் அமுலாக்குவோம். 
அத்துடன், வாகனமொன்றை கொள்வனவு செய்வது தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்றையும் நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.


ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் வெளிநாடுகளில் வேலை செய்து விட்டு இலங்கைக்கு திரும்பி வருபவர்கள் குறுகிய காலத்தில் கொண்டு வந்த எல்லா பணத்தையும் செலவழித்துவிட்டு. மீண்டும் வெளிநாடு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். கையில் பணம் இருந்தாலும் அதனை எவ்வாறு பயனுள்ள வகையில் முதலீடு செய்யவேண்டுமென்ற வழிகாட்டல் அவர்களுக்கு கிடையாது. 


நாட்டிலே விளைச்சல் குறைந்த சிறிய தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. அவற்றை இந்த இளைஞர்களுக்கு பெற்றுக்கொடுத்தால் பயிர் செய்வதற்கான நிலம் இருக்கிறது பணம் இருக்கிறது.

எனவே அதனை விருத்தி செய்து தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். எனவே பணத்தை தேடி மீண்டும் நாட்டை விட்டு வெளியே செல்லாமல் கொண்டு வந்த பணத்தை இந்த நாட்டிலே முதலீடு செய்து தனது வாழ்க்கையை வளர்த்துக்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த முதலீடுகள் பற்றிய முறைசார்ந்த திட்டமொன்றை தயாரிக்கும்” என்றார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )