மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும் !
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்கு தான் எப்போதும் பாடுபட்டு வந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த காலத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்ட போது மக்களின் சுதந்திரத்தையும் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததாகவும், ஆனால் நான் சிவில்சமூக உரிமைகளை அழித்ததாக சிலர் குற்றம் சுமத்திய போதிலும், தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி தேர்தலை நடத்த முடிந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (12) நடைபெற்ற தேசிய சமூகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
500இற்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் சமூகத் தலைவர்களால் தயாரிக்கப்பட்ட சிறந்த சமுதாயத்திற்கான யோசனைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்களின் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கமொன்று இருக்க வேண்டும். அதேநேரத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியின் காரணமாக நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரமொன்று உருவாக்கப்பட்ட போதிலும், துரதிஷ்டவசமாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் மாற்றத்தைப் பற்றி பேசிக் கொண்டு மாறதிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வேலைத் திட்டத்தை ‘இயலும் ஶ்ரீலங்கா’ திட்டத்தின் ஊடாக முன்வைத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை சிவில் சமூகங்கள் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:
”உங்களின் யோசனைகள் அடங்கிய அறிக்கைகள் எனக்கு கையளிக்கப்பட்டன. அவை குறித்து கவனம் செலுத்தி செயற்படுத்த எதிர்பார்க்கிறேன். 2 வருடத்திற்கு முன்னர் போராட்டத்தினால் நாட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரிய இழப்புகள் ஏற்பட்டன. நாட்டின் ஸ்தீரத்தன்மை பாதிக்கப்பட்டது. அதற்கு எதிராக பல நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சிவில் சமூக சுதந்திரத்தை முறியடித்ததாக கூறினர். ஸ்தீரத்தன்மைக்கும் அரசியலமைப்பு அடிப்படைகளுக்கும் இடையில் சமநிலையைப் பேண நடவடிக்கை எடுத்தேன். நாட்டில் இன்று சுதந்திரமும் இருக்கிறது. தேர்தலும் நடக்கிறது. அவற்றை முன்னெடுக்காதிருந்தால் நாமும் பங்களாதேஷத்தைப் போன்று ஆகியிருப்போம்.
இந்த சுதந்திர அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கமும் சட்டம் ஒழுங்கும் ஸ்தீரத்தன்மையும் இருக்க வேண்டும். அதனை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். சுதந்திரம் பெற்ற காலம் முதல் அரசாங்கமும் எதிரணியும் மோதிக் கொண்டுள்ளன. விமர்சித்துக் கொண்டுள்ளன. இருந்தாலும் எதிரணியை அரசாங்கம் அழித்ததும் கிடையாது. தோல்வியடைந்தால் அதிகாரத்தை ஒப்படைக்காமல் இருந்ததும் கிடையாது. இது 1931 ஆம் ஆண்டில் இருந்து நிலைநாட்டப்படும் எமது சாதனையாகும். அது தொடர்பில் பெருமைப்பட வேண்டும். சமூக செயற்பாட்டாளர்கள் இருப்பதாலே அதனை முன்னெடுக்க முடிந்துள்ளது. அவர்களின் பொறுப்பு என்ன? இதில் முழுமையான மறுசீரமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். 2 வருடகாலத்தில் அரசியல் முறைமையயும் பொருளாதார முறைமையும் முற்றாக வீழ்ச்சியடைந்தன. முன்பிருந்தது போன்று கட்சி முறை கிடையாது. கட்சிகள் துண்டு துண்டாகியுள்ளன. துரதிஷ்டவசமாக பழைய முறைகளின் படியே அவை செயற்பட்டன . மாற்றம் பற்றி பேசினாலும் மாற்றத்தை காணவில்லை. எவ்வாறு சமூகத்தை எவ்வாறு மீளமைப்பது என்பது குறித்து ‘இயலும் ஶ்ரீலங்கா’ திட்டத்தில் நாம் முன்வைத்துள்ளோம்.
விவசாய நவீன மயமாக்களின் ஊடாக வறுமை ஒழிக்கப்பட்டு கிராமங்களின் வருமானம் உயரும். வறுமை குறையும். மலையகத்தில் லயன்கள் கிராமங்களாக மாற்றப்பட்டு காணி உரிமை வழங்கப்படும். சாதி, மத பேதம் பாராது சமூக நியாய ஆணைக்குழு உருவாக்கப்படும். இவற்றின் ஊடாக நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும். தனித்தனியாக அன்றி பொதுவாக நோக்கினால் பாரிய முன்னேற்றம் ஏற்படும்.
டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், பணவீக்கம் குறைப்பு என்பவற்றின் ஊடாக முதலாவது தசாப்தத்தில் முன்னேற்றத்தை எட்டலாம். முன்னாள் சட்டமா அதிபர் டெப் தலைமையிலான குழுவினால் தேர்தல் முறை அரசியல் முறை தொடர்பில் 87 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை செயற்படுத்தினால் பாரிய மாற்றத்தை காணலாம். எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை.
மக்கள் சபையின் ஊடாக கிராமங்கள் இணைக்கப்படும். பிரதேச சபைகளில் இருந்து அரசியல்வாதிகள் இணைக்கப்படுவர். சகலரதும் யோசனைகள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களில் ஆராயப்படும். சிவில் சமூகமும் அரசியல்வாதிகளும் இங்கு கைகோர்க்கின்றனர். இவை அனைத்தையும் இணைத்து சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர இருக்கிறோம். இதில் கிராமத்திலும், நகரத்திலும் உள்ள மக்களுக்கே முக்கிய பங்கு உள்ளது. சகல துறைகள் தொடர்பான அமைப்புகளின் பங்களிப்பு கிராம மட்டத்தில் இருந்து தேசிய மட்டத்திற்கு கிடைக்கும். இதற்கான கட்டமைப்பினை உருவாக்கவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கிராம மட்டத்தில் சிவில் செயற்பாட்டாளரகள் உருவாக வேண்டும். எதிர்காலம் பற்றி சிந்தித்தே செயற்பட வேண்டும். கடந்த கால அரசியலில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது. இல்லாத பொருளை ஏலத்தில் விற்க முடியாது. சிறந்த சமூக முறையொன்றை உருவாக்க நீங்கள் அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, பிலிப் திஸாநாயக்க, வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் செயற்பாட்டாளர் கே.எல்.நிரோஷன், கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.டி.பி.எஸ்.அப்பாஸ் ஹிதாயதுல்லா, பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எஸ்.டி.கணேசலிங்கம் மற்றும் திலக் காரியவசம் , சட்டத்தரணி தனுக கஹந்தகமகே, உசாமா லியாவுதீன், ஹேமம்பிரிய கவிரத்ன ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.