பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை

பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடிவு செய்துள்தாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“எமது கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தமிழ்த் தேசியத்தை சிதைய விடாது பாதுகாத்துக் கொண்டு தமிழ் மக்களுக்குரிய உரித்துக்களை வென்றெடுப்பதே ஆகும்.

இதன்பொருட்டு அரசியல் அனுபவங்கள் உள்ளவர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் என்னை நம்பி வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பினர்.

எமது கட்சியில் உள்ள துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள் அவர்களுக்கு பக்கபலமாக நின்று வழிகாட்ட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

என்னைப் போல் மற்றைய தமிழ் கட்சிகளில் உள்ள அரசியல் முதிர்ச்சி கொண்டவர்கள் தாம் வழி காட்டியாக நின்று கொண்டு இளைஞர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் விடவேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இதற்கு முன்மாதிரியாக நான் எமது தமிழ் மக்கள் கூட்டணியின் பணிகளில் தொடர்கின்ற அதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடாது இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளித்து அவர்களுக்கு தொடர்ந்தும் துணைநிற்க முடிவுசெய்துள்ளேன்.  

இந்த சந்தர்ப்பத்தில், கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்த மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னால் முடிந்தவரை இதே பாதையில் தமிழ் மக்களுக்கான எனது அரசியல் பயணம் தொடரும். எனது வீடு கொழும்பில் இருந்தாலும், நான் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக எனது அரசியல் சேவையை முன்னெடுப்பேன்.

சர்வதேச ரீதியாக எனக்கு இருக்கும் தொடர்புகளின் ஊடாக எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கு நான் தொடர்ந்து உழைப்பேன்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )