நாட்டுக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது : வேட்பு மனுவை கையளித்தார் சஜித் !
கட்சியாகவும் கூட்டணியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை கையளித்தோம். இத்தேர்தலில் மக்கள் வழங்கும் ஆசிர்வாதங்களின் அடிப்படையில் வெற்றி பெற்று, நல்லதொரு நாட்டை, நல்லதொரு தாய்நாட்டைக் கட்டியெழுப்ப, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான யுகத்திற்கு வழிவகுப்போம். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மையமாகக் கொண்டு ஒன்றாய் இணைந்து புதிய யுகத்தை உதயமாக்குவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன், நியமிக்கப்பட்ட ஜனாதிபதியுடன் இணைந்து, நாட்டின் நலனுக்காக 220 இலட்சம் மக்களின் நலனுக்காக நாட்டுக்காக ஆற்ற வேண்டிய சிறந்த பங்களிப்பை வழங்குவோம். இதுவரை இருந்து வந்த நாகரிகமற்ற அரசியல் கலாசாரத்தை புறந்தள்ளிவிட்டு சகோதரத்துவத்துடனும் ஒருநிலைப்பட்டும் செயற்படுவோம்.
2028 க்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதால், சுருங்கிப்போயுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இது அனைவரினதும் பொறுப்பு என்பதனால், 220 இலட்சம் மக்களும் ஒன்றாய் இதற்காக உழைக்க வேண்டும். இதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதாகும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.
இதன் பிரகாரம், நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட செயலகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரால் குறித்த வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேட்பாளர் தெரிவில் கடும் போட்டி காணப்பட்டது. பெண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதிகளவான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவோம் என்று எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசியலில் அல்லது வேறு எந்தத் தொழிலிலும் பணிபுரிபவர்கள் அனைவரும் தங்கள் சேவையை முடித்துக் கொள்ள வேண்டிய காலம் வரும். மக்களின் ஆசீர்வாதத்திற்கும் விருப்புக்கும் உட்பட்டு செயற்படுவதே இறுதியில் முக்கியமானது என ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.