வடக்கு காசாவில் முற்றுகையை இறுக்கும் இஸ்ரேல் லெபனான், சிரியாவில் தாக்குதல்

வடக்கு காசாவில் முற்றுகையை இறுக்கும் இஸ்ரேல் லெபனான், சிரியாவில் தாக்குதல்

ஓர் ஆண்டை கடந்திருக்கும் காசா போர் தற்போது பிராந்தியம் எங்கும்பரவி உள்ள சூழலில் சிரிய கடற் கரை நகர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதோடு யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

லெபனானில் புதிய வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்து இஸ்ரேல்
தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ஈரான் மீது தாக்கினால் கடுமையான பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் நேற்று மீண்டும் எச்சரித்தது.

இந்நிலையில் காசா நகரில் இஸ்ரேல் நேற்று நடந்திய வான் தாக்குதலில் 11பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்திருக்கும் அதேநேரம்
ஜபலியா அகதி முகாமுக்கு இஸ்ரேலிய டாங்கிகள் ஊடுருவி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு காசாவில் நிலவும் உணவு மற்றும் மருந்துகளுக்கான பற்றாக்குறை தொடர்பில் பலஸ்தீனர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டு வருகின்றனர்.

ஜபலியாவில் இஸ்ரேலியப்படைகள் வான் தாக்குதல் நடத்தியும், டாங்கிகள் மூலம் செல் குண்டுகளை வீசியும், குண்டுகளை வைத்தும் வீடுகளை தகர்த்து வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை ஒன்றில் அடைக்கலம் பெற்றிருக்கும் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்களை வெளியேற்றும்போது வீசப்பட்ட செல் குண்டுத் தாக்குதலில் அவர் சிக்கியதாக காசாவின் சிவில் அவசரப் பிரிவு தெரிவித்தது.

காசா நகரில் இருந்து தூர வடக்காக பெயித் ஹனூன், ஜபலியா மற்றும் பெயித் லஹியா பகுதிகளை இஸ்ரேலியப் படையினர் தனிமைப்படுத்தி இருப்பதாக அங்கிருக்கும்
குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இப்பகுதிகளில் இருந்து வெளியேறுபவர்களுக்கு இந்த முற்றுகை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

‘நாம் எமது மரண சாசனத்தை எழுதி வருவதோடு ஜபலியாவில் இருந்து நாம் வெளியேறப்போவதில்லை’ என்று குடியிருப்பாளர் ஒருவர் ‘சாட் ஏப்’ செயலி வழியாக
ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

‘போரின் ஆரம்ப காலத்தில் எமது வீடுகளில் இருந்து வெளியேறாததற்கு ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல்) எம்மை தண்டித்து வருகின்றனர்.

இப்போதும் கூடநாம் வெளியேறப்போவதில்லை. அவர்கள் எமது வீடுகள் மற்றும்
வீதிகளை தகர்த்து எம்மை பட்டினியில் வைக்கிறார்கள்.

என்ற போதும் நாம் இறப்போமே ஒழிய எமது கௌரவத்தை விட்டுக்கொடுக்க
மாட்டோம்’ என்று தமது பெயரைக்குறிப்பிடாத நான்கு குழந்தைகளின்
தந்தை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் வசித்து வந்த வடக்கு காசா,போரின் ஆரம்பக் கட்டத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் சின்னபின்னமாக்கப்பட்டது.

தற்போது அங்கு நான்கு இலட்சம் வரையான பலஸ்தீனர்கள் எஞ்சி இருப்பதாக நம்பப்படுகிறது.

காசாவுக்கான உதவிகள் செல்வது மற்றும் போர் வலயங்களில் விநியோகங்கள் தடுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. குற்றம்சாட்டி வருகிறது.

இதில் வடக்கு காசாவுக்கு கடந்த ஒக்டோபர் 2 மற்றும் 15 ஆம் திகதிக்கு இடையே எந்த உணவு உதவிகளும் செல்லவில்லை என்று ஐ.நா.குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஜோர்தான் வழங்கிய உணவு, நீர், மருந்துகள் மற்றும் தங்குமிட உபகரணங்களை ஏற்றிய 50 லொறிகள் வடக்கு காசாவுக்கு சென்றதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.

காசாவுக்கு உதவிகளை அனுமதித்ததாக இஸ்ரேல் இராணுவத்தின் கூற்று தவறான வழிநடத்தலாகும் என்று காசாவின் அரச ஊடகப் பணிப்பாளர் இஸ்மைல்
அல் தவப்தா குறிப்பிட்டுள்ளார்.

‘இஸ்ரேல் இராணுவம் பொய் கூறுகிறது, உணவு லொறிகள் நுழைவது தொடர்பில் பொதுமக்களை தவறாக ‘வழிநடத்த முயற்சிக்கிறது’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அனைத்து மனிதாபிமானப் பாதைகளையும் மூடி காசாவின் தூர வடக்கே தொடர்ந்து 170 நாட்களால் இஸ்ரேல் இராணுவம் விரிவான முற்றுகையை மேற்கொண்டு வருவதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களில் இங்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 342 பேர் கொல்லப்பட்டி
ருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘வெளியேற்றும் திட்டம் ஒன்றாக இனச்சுத்திகரிப்பு,குடியிருப்புப் பகுதிகள்,
வீடுகள், விதிகள், மருத்துவமனைகள், பாடசாலைகள்,பள்ளிவாசல்கள் மற்றும் உட்
கட்டமைப்புகளை அழித்தது வடக்கு காசாவில் இனப்படு கொலை ஒன்றே இடம்பெற்று
வருகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இடம்பெற்று வரும் தாக்குதல்களில் கொல்லப்
பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,400ஐ தாண்டியுள்ளது.

சிரியா, யெமனில் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள், லெபனானில் ஹிஸ்புல்லா மற்றும் காசாவில் ஹமாஸ் ஈரான் ஆதரவு பெற்ற கூட்டணியாக கருதப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய 200க்கும் அதிகமான ஏவுகணைகளுக்கு பதிலடி கொடுப்பதில் இஸ்ரேல் தொடர்ந்து உறுதியாக உள்ளது.

இது பல முனைகளில் இடம் பெற்று வரும் போரை பிராந்திப் போராக மாற்றும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.

‘தவறு செய்து பிராந்தியத்தில் அல்லது ஈரானில் எமது இலக்குகள் மீது தாக்குதல் நடத்தினால் வலி மிக்க பதில் தாக்குதலை நாம் நடத்துவோம்’ என்று ஈரான் புரட்சிக் காவல்படை தளபதி ஹுஸைன் சலாமி எச்சரித்துள்ளார்

கடந்த மாதம் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட தெற்கு பெய்ரூட்டில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதலின்போது பலியான ஈரானிய
ஜெனரல் ஒருவரின் இறுதிக் கிரியையில் பேசியபோதே அவர் இதனைத்
தெரிவித்தார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் கோட்டை என கருதப்படும் லடகியா நகரில் நேற்று முன்தினம் (16) இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் இரு பொதுமக்கள் காய
மடைந்ததாக சிரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான அயுதக் கிடங்கு ஒன்றை இலக்கு வைத்தே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித
உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
மறுபுறம் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா பி-2 குண்டுவீசும் விமானத்தைக் கொண்டு ஹூதி கட்டுப்பாட்டு யெமன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் மற்றும் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பி-2 என்பது 40,000 பௌண்ட் குண்டுகளுடன் அமெரிக்காவில் இருந்து இரகசியமாக இடைவிடாது பயணிக்கும் திறன் கொண்டது என்று அமெரிக்க விமானப்படை
அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

நவீன ரக விமானங்களில் அதிக எடையுடைய ஆயுதங்களை சுமக்கக்கூடிய விமானமாக இது உள்ளது.

லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கிழக்கு லெபனானில் பக்கா பள்ளத்தாக்கில் உள்ள மக்களுக்கு இஸ்ரேல் புதிய வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது ஹிஸ்புல்லா அமைப்பு பலம்பெற்ற பகுதியாக உள்ளது.

இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் மற்றொரு இஸ்ரேலிய டாங்கியை அழித்ததாக ஹிஸ்புல்லா போராளிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

இங்கே இரு தரப்புக்கும் இடையேஉக்கிர மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )