தென்னிலங்கை அரசியல் கட்சிகள் வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது !
தென்னிலங்கை கட்சிகள் இனவாத சிந்தனைகளுடன் காணப்படுவதால் அவை வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.தேர்தல்
மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களுடன் களமிறங்கியுள்ளோம்.
இந்த தேர்தல் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படுகின்றது.
தென்னிலங்கை மக்கள் பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளை கொண்டுவர வேண்டும். என்ற எண்ணத்தோடு உள்ளார்கள்.
அதனால், தென்னிலங்கையில் இருக்கக் கூடிய பல மூத்த அரசியல்வாதிகள் தேர்தலிலிருந்து விலகி உள்ளனர்.
ஆனால், வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து போட்டியிட வேண்டும் என்ற பேரார்வத்துடன் காணப்படுகின்றனர்.
வடக்கில் எமது கட்சி தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் மாத்திரம் தான் தேர்தலிலிருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார்.
மற்றையவர்கள் 15 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்திலிருந்தும் மக்களை எதுவும் செய்யாத நிலையிலும் தொடர்ந் தும் ஆசைப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் இருந்தவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். வடக்கிலும் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால் தான் கற்றறிந்த இளையோரை நாங்கள்
களமிறக்கியுள்ளோம் .
தமிழ் மக்கள் எங்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தர வேண்டும்.
தமிழ் இம்முறை தேர்தலில் ஆளுமைமிக்க ஆற்றல் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர்
பிரதேச சபை என்பவற்றை நிர்வகித்துள்ளோம்.
அதில் எங்களுடைய நிர்வாக ஆளுமைகளை காட்டியுள்ளோம்.
நாம் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபை ஆகியவற்றில் ஆட்சியிலிருந்த
காலப்பகுதியில் தான் கொரோனா தொற்றும் அதனை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டன.
அவ்வாறான இடரான காலப்பகுதியில் நாங்கள் 45 உறுப்பினர்களை கொண்ட மாநகர
சபையில் 10 உறுப்பினர்களுடன் வினைத்திறனுடன் செயற்பட்டதாக அவர் தெரிவித்தார்.