வடக்கு காசாவில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதலில் 109 பேர் பலி: பலர் மாயம்

வடக்கு காசாவில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதலில் 109 பேர் பலி: பலர் மாயம்

வடக்கு காசாவில் பெயித் லஹியா நகரில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என 109 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்திற்கு தடை விதிக்க இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச அளவில் பெரும் கண்டனத்திற்கு உள்ளன நிலையிலேயே இந்தப் பயங்கரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பெயித் லெஹியாவில் உள்ள ஐந்து மாடிகள் கொண்ட அபூ நாசிர் குடும்ப வீட்டின் மீது நேற்று இந்தப் பயங்கரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் தொடர்ந்தும் 40 பேர் வரை காணாமல்போயிருப்பதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் பேச்சாளர் முஹமது பசல் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

‘இரவு நேரத்தில் வெடிப்பு இடம்பெற்றது. செல் குண்டு விழுந்ததாக ஆரம்பத்தில் நினைத்தேன், சூரிய உதயத்தின் பின் அங்கு சென்று பார்த்தபோதே இடிபாடுகளில் இருந்து சடலங்கள், உடல் பாகங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் வெளியே எடுக்கப்படுவதைக் கண்டேன்’ என்று தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் அடைக்கலம் பெற்றிருக்கும் 30 வயது ரபீ அல் ஷன்டக்லி தெரிவித்தார்.

‘உயிரிழந்த பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பதோடு காயமடைந்தவர்களைக் காப்பாற்ற மக்கள் போராடுகின்றபோதும் இங்கே மருத்துவமனைகளோ முறையான மருத்துவ பராமரிப்புகளோ இல்லை’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடிபாடுகளில் தீவிர தேடுதலில் ஈடுபட்ட பலஸ்தீனர்கள் உடல்களை மீட்டு வந்ததோடு மற்றவர்கள் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்தினர். நீண்ட தலைமுடியைக் கொண்ட சிதைந்த உடல் ஒன்று பெயித் லஹியாவில் உள்ள கட்டடத்தின் ஜன்னலில் தொங்கியபடி இருக்கும் படத்தை ஏ.எப்.பி. வெளியிட்டிருந்தது.

‘இந்த வீட்டில் பலரும் இடம்பெயர்ந்திருந்த நிலையில் பலரும் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். முன்னெச்சரிக்கை இன்றியே வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உங்களால் உயிர்த்தியாகம் செய்தவர்களை அங்கும், இங்கும் பார்க்க முடியும். உடல் பாகங்கள் சுவர்களில் தொங்கிக் கிடக்கின்றன’ என்று சம்பவத்தைப் பார்த்த இஸ்மைல் ஒவைதா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு காசாவில் இஸ்ரேலியப் படை கிட்டத்தட்ட ஒரு மாதமாக முற்றுகையில் ஈடுபட்டு படை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில் அங்குள்ள ஜபலியா, பெயித் லஹியா மற்றும் பெயித் ஹனூன் பகுதியில் மருந்துகள் அல்லது உணவுகள் இன்றி சுமார் 100,000 மக்கள் சிக்கி இருப்பதாக பலஸ்தீன சிவில் அவசர சேவை நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் அருகில் இருக்கும் கமால் அத்வான் மருத்துவமனையில் மருத்துவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் தற்போது காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

‘படுகாயத்திற்கு உள்ளானவர்கள் சிகிச்சை இன்றி உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’ என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருவதோடு அங்கு ஆட்சியில் உள்ள ஹமாஸ் போராளிகளும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். வடக்கு காசாவில் இடம்பெற்ற மோதல்களில் நான்கு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணும் கூறியது.

நேற்றுக் காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 115 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்டுள்ள பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டி 43,061 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் ஈடு செய்ய முடியாத மனிதாபிமான அமைப்பாக உள்ள பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தை தடைசெய்ய இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த ஐ.நா. நிறுவனம் கடந்த ஏழு தசாப்தங்களாக பலஸ்தீன அகதிகளுக்கு அத்தியாவசியமான உதவி மற்றும் ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடைக்கு இஸ்ரேலின் கூட்டணி நாடுகள் கண்டனத்தை வெளியிட்டிருந்தபோதும் சர்வதேச அழுத்தங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மூத்த உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சட்டத்தின்படி பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தடை மூன்று மாதங்களுக்குள் அமுலுக்கு வரவுள்ளது.

இதேவேளை லெபனானின் கிழக்கு பக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 16 பகுதிகளை இலக்கு வைத்து இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் இரு சிறுவர்களும் இருப்பதாக அது சுட்டிப்பாட்டியுள்ளது.

ஹிஸ்புல்லாவை இலக்கு வைப்பதாகக் கூறி கடந்த ஐந்து வாரங்களில் லெபனானில் இஸ்ரேல் ஆயிரக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )