கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கிடையே மோதல் ; 100-க்கும் மேற்பட்டோர் பலி

கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கிடையே மோதல் ; 100-க்கும் மேற்பட்டோர் பலி

கினியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரான என்சரிகோரில் உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. போட்டியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துக்கொண்டு இருந்தனர். போட்டியின்போது நடுவர் சர்ச்சையான தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு தரப்பு ரசிகர்கள் ஆத்திரமடைந்து கால்பந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதைக்கண்ட மற்றொரு தரப்பினரும் மைதானத்தில் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதல் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. மைதானம் மட்டுமின்றி, மைதானத்திற்கு வெளியேயும், சாலைகளிலும் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அத்துடன், மைதானம் அருகே உள்ள காவல்நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உடல்கள் வரிசையாக உள்ளன. பிணவறை நிரம்பியுள்ளது. சுமார் 100 பேர் இறந்துள்ளனர்.”என்றார்.

கால்பந்து போட்டியின்போது ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் நூறுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம், அந்நாட்டில் பதட்டமான சூழலை உருவாக்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )