மஹிந்தவுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே அதற்க பொறுப்பு கூறவேண்டும்
மஹிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது. ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்ட தரப்புகளிடமிருந்தும் அச்சுறுத்தல் உள்ளது என அறிக்கை வழங்கியும், அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மஹிந்தவுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே அதற்க பொறுப்பு கூறவேண்டும்.” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய இராணுவ பாதுகாப்பு நேற்று (23) முதல் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ” புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டிய மஹிந்த ராஜபக்சவுக்குரிய இராணுவப் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டமையானது அவரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது மஹிந்த ராஜபக்சவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் அறிக்கையொன்றை கோரி இருந்தது.
5 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பாக உள்ள அதிகாரியால் மேற்படி குழுவுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.
13 புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள்காட்டி மஹிந்த ராஜபக்சவுக்குள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றியும், அவருக்கு ஏன் பாதுகாப்பு குறைக்கப்படக்கூடாது என்பது பற்றியும் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளரால், பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பிலான குழுவுக்கு அறிக்கை அனுப்பட்டிருந்தது.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலும் உள்ளது. ஐஸ் அமைப்பு, புலிகள் அமைப்பு மற்றும் பாதாள குழுக்கள் உள்ளிட்ட தரப்புகளால் மஹிந்த ராஜபக்சவுக்குள்ள அச்சுறுத்தல் குறையவில்லை என மஹிந்தவின் பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ள அதிகாரி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இப்படி அறிக்கைகள் வழங்கப்பட்டும், அதன் உள்ளடக்கங்களை மறைத்துவிட்டு மஹிந்தவுக்குரிய இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
எனவே, மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். போருக்கு முடிவுகட்டி, படையினரின் சடலங்கள் கிராமங்களுக்கு வருவதை தடுத்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவருக்கு ஆயிரம் பேரை பாதுகாப்புக்கு வழங்கினால்கூட அதில் தவறு இருக்காது.” தெரிவித்துள்ளார்.